இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரி திடீரென்று இராமேஸ்வரம் அருகே கடல் ஆய்வு நடத்தியது, குளச்சல் துறைமுகத்திற்கு சாதகமாக அமையும் வகையில் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா, அல்லது தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. பாலம் அமைக்கும் திட்ட ஆய்வா என்பது மர்மமாக உள்ளது.
இராமேஸ்வரம் தீவு அருகே கடந்த வாரம் கடற்கரை ஓரமாக நவீன கப்பல் மூலம் ஆய்வு நடந்தது. மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ்குமார் தலைமையில் நிபுணர் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். எதற்காக இந்த திடீர் ஆய்வு என்று மத்திய அரசு அதிகாரி சொல்லாமல் நழுவி கொண்டார். இந்த திடீர் ஆய்வு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:
* சேதுசமுத்திர கால்வாய் திட்டம் 2005ல் ரூ.2,500 கோடி (இந்திய ரூபாய்) மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி, பாதி முடிந்த நிலையில் அரசியல் புயல்வீசியது. இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை ஆணை பெற்றதால் முடங்கியது. சேதுசமுத்திர கால்வாய் அமைந்தால், கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் 254 முதல் 424 கிமீ கூடுதலாக பயணித்து இலங்கையை சுற்ற வேண்டியது இல்லை.
மத்தியில் பாஜ ஆட்சி அமைந்ததும் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பை கைவிட்டு, மாற்று பாதையில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த அடிப்படையில் 2014 இறுதியில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி இராமேஸ்வரம் வந்து ஆய்வு நடத்தினார். அதோடு திட்டம் கிடப்பில் கிடக்கிறது.
இந்த சூழலில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இனயத்தில் ரூ.27,570 கோடியில் பெரிய துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால், அது குளச்சல் துறைமுகத்திற்கு பொருளாதார ரீதியில் சாதகமாக அமையும், வலு சேர்க்கும் என்பது நிபுணர்களின் பரிந்துரையாக உள்ளது. எனவே சேதுசமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற ஆய்வு மேற்கொண்டதாக கருதப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மாற்றுப்பாதை மனு தாக்கல் செய்த பிறகே இதில் முடிவு ஏற்படும்.
* இன்னொரு கருத்தும் நிலவுகிறது. இராமேஸ்வரம் தீவின் தனுஷ்கோடியையும் இலங்கை தலைமன்னாரையும் இணைத்து வங்காள விரிகுடா கடலில் பாலம் கட்ட திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்திருந்தார்.
23 கிமீ தூரம் கடலில் பாலம் அமைக்க வேண்டி உள்ளது. இடையில் கப்பல்கள் செல்வற்கு வசதியாக சாலை பாலத்தின் ஒரு பகுதியை கடலுக்கு அடியில் சுரங்க பாதையாக அமைத்து கொள்ளலாம், அதோடு ரயில் பாலமும் அமைத்து கொள்ளலாம் போன்ற யோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு நடத்தவும், அதை தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் அறிக்கை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் உத்தேச மதிப்பீடு ரூ.23 ஆயிரம் கோடி. பாலம் அமைக்க திட்டமிடும் பகுதி, சேதுகால்வாய் அமையும் பகுதி ஆகிய இரண்டுமே பாக் ஜலசந்தி ஆகும். இங்கு கடல் ஆழம் குறைவாக தான் உள்ளது. இங்கு தான் மத்திய அரசின் ஆய்வு தீவிரமாக உள்ளது. இரு திட்டங்களின் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
இருவேறு கருத்துகள் நிலவுவதால், 2014ல் நடைபெற்ற ஆய்வை தொடர்ந்து தற்போதைய திடீர் ஆய்வும் மர்மமாக உள்ளது. சேதுசமுத்திர திட்டமே வேண்டாம் என்பது தமிழக அரசின் முடிவாக இருப்பதால், இந்த ஆய்வு குறித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.