நாங்கள் மக்கள் நலன் கருதியே அரசியலில் உள்நுழைந்துள்ளோம். எமக்கு எமது மக்கள் நலமே முக்கியம். அவர்களின் விடிவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களின் சுதந்திரமும் சுபீட்சமும் எமது தாரக மந்திரங்களாகத் தொனிக்கட்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் இணைத்தலைமை தாங்கிய முதலமைச்சர் தனது தலைமையுரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் உறவு முறை இன்னமும் சரியாக ஒழுங்கு செய்யப்படவில்லை என்பதே எனது கருத்து.
ஜனாதிபதியை நான் இவ் வருடம் ஜனவரி மாதம் 2ம் திகதி சந்தித்த போது மக்களின் பிரதிநிதிகள் தற்போது வட மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மத்தியால் இதுவரை நிர்வகிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் மக்கள் பிரதிநிதிகளிடமே கையளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதற்கு அவர் பட்டும் படாமலுந் தான் பதில் அளித்தார். அதன் பின்னர் ஜனாதிபதி விசேட ஆளணி கைவிடப்பட்டு இப்பொழுது பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மத்திய அரசாங்க செயற்றிட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
எனவே இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக அமைவன. அதுமட்டுமல்ல மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மக்கள் தோளில் ஏறிச் சவாரி செய்வதாகவும் அமைகின்றன.
நாங்கள் செயற்படுவதற்கு அனுமதித்து விட்டு எம் செய்கைகளை மத்திய அரசாங்கம் மேற்பார்வை செய்வதில் எமக்கு ஆட்சேபனையுமில்லை.
ஆனால் தாமே நடைமுறைப்படுத்தி விட்டு மக்கள் பிரதிநிதிகளை வந்து கைதட்டி விட்டுச் செல்லுங்கள் என்று கூறுவது எமக்கு அதிருப்தியைத் தருகின்றது.
நான் எவரையும் தாக்கிப் பேசுவதாக இங்குள்ள எவரும் நினைக்கக் கூடாது. ஒரு விடயத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு ஒழுங்கமைப்பினுள் சிறைப்பட்டவர்கள். இந்த ஒழுங்கமைப்பை மாற்றா விட்டால் மக்கள் உரித்துக்கள் பாதிக்கப்படும்.
உதாரணத்திற்கு இன்று நாம் இருக்கும் அரசியில் நிலை மாற்றமடைந்து தற்போதைய மாகாண அரசு மத்திய அரசுக்குச் சார்பாகவும் இன்று மத்திய அரசுடன் சார்பாக இருப்பவர்கள் எதிர்த்தரப்பாகவும் மாற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும் நான் கூறும் கூற்று உண்மையை வெளிப்படுத்துவதாகவே அமையும்.
மாகாணம் தன்னைத்தானே நிர்வகிக்க, தன் தேவைகளைத் தானே உணர்ந்து தக்கவாறு நடவடிக்கை எடுக்க, மத்திய அரசாங்கம் இடமளிக்க வேண்டும். அது தான் ஜனநாயகம்.
எமது தலைவர் சம்பந்தனிடம் ஒருவர் ஒரு நாள் குறைபட்டுக் கொண்டார். “ஐயா! இன்னார் முரண்பட்டு ஒழுகுகின்றார்” என்று குறை கூறினார். அதற்குத் சம்பந்தன் கூறினார் “முரண்பாடு என்பது ஜனநாயகத்தின் வெளிப்பாடு அல்லவா?” என்று.
அதுபோல மாகாணம் சில விடயங்களில் முரண்படுவதை மத்தி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதை நாம் அறிவோம்.
ஆனால் தம்மைத் தாமே தக்கவாறு பரிபாலிக்க, நிர்வகிக்க, பாதுகாக்க மாகாணம் எத்தனிக்கும் போது அதற்குத் தடையாக நடந்து கொள்வது வருங்காலத்தில் பாரிய விளைவுகளைக் கொண்டுவரக் கூடும்.
அரசியல் காரணங்களுக்காக வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்களாகிய நாம் ஒருவருடன் ஒருவர் முட்டி மோதி முரண்பட்டுக் கொள்வது எம்மை நாமே பலவீனப் படுத்துவதாகவே அமையும்.
முரண்பாடுகள் அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். ஆனால் நாம் யாவரும் எமது மக்கள் நலன் கருதியே பயணிக்கின்றோம் என்ற எண்ணம் எம் யாவருள்ளும் மேலோங்க வேண்டும்.
வடமாகாண ஆளுங் கட்சிப் பிரதிநிதிகளான எங்களைப் பொறுத்த வரையில் எமக்கு மக்கள் சில கடமைகளை ஆற்றுப் படுத்தியுள்ளார்கள். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே அவற்றை முன்னெடுத்துச் செல்வதே எமது குறிக்கோளாக இருக்கும். வருங்காலத்தில் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன எமது வடமாகாண சபை தமக்கு மக்களால் இடப்பட்ட கட்டளைகளை, பணிகளை, எதிர்பார்ப்புக்களைக் கருதியே கருமமாற்றுவார்கள்.
இன்று எம்முடன் எதிரும் புதிருமாக இருக்கும் எமது இணைத்தலைவரின் கட்சி எம்முடன் வருங்காலத்தில் சேர்ந்து பயணம் செய்ய முன்வந்தாலும் நாம் அதிசயமடைய வேண்டிய அவசியமில்லை.
இன்றைய தமிழ், முஸ்லிம் இணைத்தலைவர்கள் சந்தர்ப்பம் அறிந்து சதிர் ஆடக் கூடிய சக்தி பெற்றவர்கள். இவையெல்லாம் அரசியலில் சாத்தியமே,
எனினும் நாம் யாவரும் மக்கள் நலன் கருதியே அரசியலில் உள்நுழைந்துள்ளோம். எமக்கு எமது மக்கள் நலமே முக்கியம். அவர்களின் விடிவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களின் சுதந்திரமும் சுபீட்சமும் எமது தாரக மந்திரங்களாகத் தொனிக்கட்டும் என்றார்.