1998 ஆம் ஆண்டு 2 இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் 05 இராணுவ வீர்ர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த 16 இராணுவத்தினர் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு 1999 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்த நிலையில் பின்னர் வழக்கு நடைபெறவில்லை.
குறித்த வழக்கு தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு, சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் குறித்த வழக்கினை கொலைக்குற்ற வழக்காக விசாரணை செய்யுமாறு அச்சுவேலி பொலிஸாருக்கும் யாழ்.நீதவான் நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் பிரகாரம், சம்பந்தப்பட்ட 16 இராணுவ வீரர்களுக்கும் யாழ்.நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதன் பிரகாரம் நேற்று திங்கட்கிழமை 5 இராணுவத்தினர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
கடமையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் குறித்த 5 பேரும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில், குறித்த 5 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு 5பேர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் கோரினார்.
குறித்த 16 இராணுவத்தினருக்கும் எதிராக கொலைக்குற்ற வழக்கு தாக்கல் செய்து விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவித்துள்ளமையினால் பிணை வழங்க முடியாது என நீதவான் கூறி 5 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், ஏனைய 11 பேரையும் கைதுசெய்து 10 ஆம் திகதி அடுத்த வழக்கின் போது நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அச்சுவேலி பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.