இராணுவ விசாரணை சபையின் பரிந்துரைகள்

LLRC_Report_3கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் சாராம்சம் பின்வருமாறு,

(அ). இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு சகல முன் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இராணுவம் முன்னெடுத்திருந்தது என சபை கண்டறிந்துள்ளது.

இழப்புக்களை இன்னும் குறைப்பதற்கு காலாட்படை உபாயங்கள், விசேட இராணுவ நடவடிக்கைகள், ஷெல் தாக்குதல்கள், கவச வாகனப் பயன்பாடு, கூட்டுப்படை நடவடிக்கை போன்ற இராணுவ செயற்பாடுகளை நகர்ப்புற போர்க்களம் தொடர்பில் மீள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

(ஆ). நவீன முறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கருவிகள் என்பவற்றை அடக்கியுள்ள கூட்டுப்படை இராணுவ உபாயங்களை வடிவமைக்க வேண்டும்.

(இ). உள்நாட்டுப் போரில் பிரயோகிக்கக் கூடிய சர்வதேச மனிதாபிமான சட்டக் கொள்கைகள், பல்வேறு சிக்கிலான பிரச்சினைகளுக்கு போதுமான தீர்வுகளை தரவில்லை என சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், உள்நாட்டு யுத்த நிலைமையில் சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களின் நடிபங்கு தொடர்பில் குறிப்பான வழிகாட்டல்கள் இதில் இல்லை எனவும் எனவே, உள்நாட்டு யுத்த நிலைமைகளை அடக்கும் வகையில் புதிய உள்நாட்டு சட்டங்களை உருவாக்க வேண்டும்.

(ஈ). 30 வருட யுத்தத்தின் போது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியின்மை காரணமாக இலங்கை இராணுவம் பாதகமான நிலையில் காணப்பட்டது. எனவே, ஆயுத படையினர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் தேர்ச்சி பெறும் வகையில் இவற்கற்பிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

(உ). யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கும் வலுவிழந்துபோன வீரர்களுக்கும் நலன்புரி சேவைகளை வழங்கும் பொறிமுறை இப்போதும் காணப்படுகின்றது என்பதை சபை கவனத்தில் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ளது போன்று இராணுவ தலைமையகத்தில் முன்னாள் இராணுவ வீரர் அலுவல்களுக்கென தனியான பணியகம் அமைக்கப்பட வேண்டும்.

(ஊ). சில நாடுகளின் உள்நாட்டு அமைச்சின் கீழோ அல்லது மாகாண நிர்வாகங்களின் கீழோ பொலிஸ் உள்ளது. அங்கு உள்நாட்டு அமைதி பெருமளவில் இல்லை. இலங்கை பொலிஸானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரவேண்டும்.

(எ). தீவின் எந்தப் பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைக்கும் உரிமை அரசாங்கத்துக்கு உள்ளது. என்பதை சபை ஏற்றுக்கொள்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, கிழக்கு) அமைக்கப்பட்டுள்ள 5 பாதுகாப்புப்படை தலைமையகங்களை அடக்கும் வகையில் விசேட சபைகள் அமைக்கப்பட வேண்டும். இவை, இராணுவம் தற்போது பிடித்து வைத்திருக்கும் நிலங்கள் பற்றி ஆராய்ந்து பாதுகாப்புக்கு அவசியமென கருதப்படும் நிலங்களை மட்டும் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும்.

இந்த நிலங்களுக்கான நட்டஈடு, சந்தை விலையில் வழங்கப்பட வேண்டும். அத்துடன், காணி உரிமையாளர்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும்.

Related Posts