யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில் நாளைய தினம் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக யாழ்.பல்கலைக்கழகத்தில் சுடர் ஏற்றப்படலாம் என்ற அச்சநிலை காரணமாக இன்று காலை முதல் அதிகளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்,காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை வீதிச்சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இருக்கும் உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று பல்கலைக்கழகத்தினை படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதேவேளை இன்று மதியம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60 வது பிறந்த தினம் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடப் பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்த இராணுவ மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையினர் சல்லடை போட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.