இராணுவ நீதிமன்ற அறிக்கையை நிராகரித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

tnaஇறுதிப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.

அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபட்டனர் எனவும் அது உறுதிபடக் கூறியுள்ளது.

அத்துடன், இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் எந்த மனச்சாட்சியோடு பொய்களைக் கூறுகின்றது என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

2009 இல் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் இருந்த பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ நீதிமன்றம் மேலும் ஒரு புதிய அறிக்கையை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது.

இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடர்பான அறிக்கையின் முதல் பகுதி புதன்கிழமை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் கையளிக்கப்பட்டது.

இராணுவ நீதிமன்றுக்கு வழங்கப்பட்ட சாட்சியங்களின்படி தமிழீழ விடுதலைப்புலிகள், பொதுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியும் பொதுமக்கள் மத்தியில் கனரக ஆயுதங்களை வைத்துக்கொண்டும், வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோரைப் படைகளில் சேர்த்தும் அவ்வாறு அவர்களை அபாயத்துக்குட்படுத்தியும் பல்வேறு குற்றங்களை புரிந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அச்சுறுத்தலுக்கமைவாகப் பொதுமக்கள் தரப்பில் சேதங்கள் எதுவும் இல்லாத வகையில் போர் நடத்தப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு இராணுவ நீதிமன்றம் வந்துள்ளது.

மேலும் சர்வதேச சமூகமானது புலிகள் நடத்திய போர்க்குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தவறிவிட்டது என்று இராணுவ நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவிய போது.

இதன்போது அவர் தெரிவித்தவை வருமாறு:

இறுதிப் போர் சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றமானது இராண்டாவது தடவையாக மாபெரும் பொய்களைக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இராணுவத்தைப் பாதுகாக்கும் நோக்குடனும், உலகத்தை திசைதிருப்பும் நோக்குடனுமேயே வெளியிடப்பட்டுள்ளது.

இராணுவம் நீதிமன்றம் முதலாவது தடவையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் காணாமல்போனவர்கள் என எவரும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க இறுதிப் போரில் 5 ஆயிரம் மக்கள்தான் கொல்லப்பட்டனர் என்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித விஜேயசிங்க தெரிவித்திருந்தார். அதேவேளை, வன்னியில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் மூலம் 7 ஆயிரம் மக்கள் மட்டும் பலியாகினர் என்று தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சு அவற்றில் விடுதலைப் புலிகளே அதிகம் பலியாகியுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறு இறுதிப் போர் சம்பவங்கள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை இராணுவ நீதிமன்றமும், அரச நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சும் ஏற்கனவே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இறுதிப் போரின் இறுதி நாட்களில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டிலிருந்து இராணுவத்தை விடுவித்து இராணுவ நீதிமன்றம் தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளினாலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனவும், சர்வதேச சமூகமானது விடுதலைப் புலிகளின் யுத்த மீறல்களை தடுத்துநிறுத்தத் தவறிவிட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். அத்துடன் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

உலகத்தைத் திசைதிருப்பவே இந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவ நீதிமன்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த அறிக்கை நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நேர்மையற்றது, நீதியற்றது, சர்வதேசத்தின் பார்வைக்கு பிரயோசனமற்றது. இது இராணுவத்தின் மற்றுமொரு பொய் முகத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் எந்த மனச்சாட்சியோடு பொய்களைக் கூறுகின்றது? பொய்களைக் கூறி தப்பித்துக்கொள்ள முடியுமா?

எனவே, இராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் போடட்டும்.
நீதியான சர்வதேச விசாரணையே உண்மையை வெளிக்கொணரும்!

இதேவேளை, இலங்கை அரசு தரப்பினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம். அதாவது தங்கள் படைத்தரப்பினர் இறுதி யுத்தத்தில் குற்றமிழைக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு நீங்கள் தயங்குவதேன்?

எனவே, பெரும்பாலான உலக நாடுகள் எதிர்பார்க்கும் சர்வதேச விசாரணையை இறுதிப் போரில் நடந்த சம்பவங்களை வெளிக்கொணரும். அதனூடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம். இதை ஐ.நா. உணர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார் சுரேஷ் எம்.பி.

Related Posts