“ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இராணுவம் மூலம்ஆட்சியைத் தக்க வைக்க மஹிந்த ராஜபக்ஷ சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டை என்னால் முழுமையாக நிராகரிக்க முடியாது.
ஏனெனில், கொழும்பில் முக்கிய பகுதிகளில் இராணுவ குவிப்பும் ஒரு சில பகுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர் எனவும் நான் அறிந்தேன்.
இது தொடர்பாக பொதுமக்கள் பலர் எனக்குத் தெரிவித்தனர். ஒரு சில இடங்களில் எம்மாலும் அதை அவதானிக்க முடிந்தது. ஆனால், தேர்தல் திணைக்களத்தை இராணுவம் சுற்றிவளைத்து அடக்குமுறையைக் கையாளவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.” – இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
“இராணுவ சதித்திட்டத்துக்கு முயன்றமை மன்னிக்க முடியாத மிகப் பாரதூரமான விடயமாகும். எனவே, கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய அரசு உடனடியாக விசாரணை நடத்தி உண்மை என்னவென்பதைக் கண்டறியவேண்டும்.
“ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று நான் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தேன். ஆனால் வேறு சிலரையும் சந்தித்தேன் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை.
கோட்டாபய ராஜபக்ஷ இறுதியாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2010 ஆம் ஆண்டுதான் வந்தார். அதன் பின்னர் அவருடன் நான் எந்தப் பேச்சுகளையும் நடத்தவில்லை. ” என்றும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.
“ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தாலும் எனக்கு இன்னமும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என உத்தியோகபூர்வமாக எனக்குத் தெரிவிக்கும் வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அக்கட்சியின் தலைவராவார்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.