இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ தரப்பு தெரிவித்திருந்தது. எனினும், கடந்த வழக்கு விசாரணைகளில் இராணுவத்தின் சார்பில் மன்றில் ஆஜராக தவறியிருந்த முல்லைத்தீவு 58ஆம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்றைய தினம் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் குறித்த விபரம் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன் உள்ளிட்டோர், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில், அவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அல்லது உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில், வவுனியா மேல் நீதிமன்றில் அவர்களது உறவினர்களால் கடந்த 2009ஆம் ஆண்டு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது.
இதற்கு முன்னரும் ஒரு தடவை மன்றில் ஆஜராகியிருந்த முல்லைத்தீவு 58 ஆம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி, எழிலன் உள்ளிட்டோர் சரணடைந்தமைக்கான விபரங்கள் தம்மிடம் இல்லையென குறிப்பிட்டிருந்தார். எனினும் சரணடைந்தவர்களின் விபரங்கள் தமது படை முகாமில் இருப்பதாகவும் அவற்றை பரிசீலித்து மன்றில் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமையானது, சர்வதேசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அதற்குள் இந்தியாவும் உள்ளடங்குமென்றும் எழிலனின் மனைவியும் வட மகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் ஏற்கனவே நீதிமன்றில் தெரிவித்திருந்தார். குறிப்பாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு முன்னர் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவையின் உறுப்பினருமான கனிமொழியுடன் எழிலன் தொலைபேசியில் உரையாடியதாக அனந்தி குறிப்பிட்டிருந்தமையும் அதனை கனிமொழி மறுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.