புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19 ஆம் திகதி – இன்னும் 9 நாள்களில் – ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன்பின்னர் தமது நம்பிக்கையான மூத்த விமானப்படை அதிகாரி ஒருவரை அப்பதவிக்கு புதிய ஜனாதிபதி நியமிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோர் அப்பதவிகளில் தொடர்வதை புதிய அரசுத் தலைமை விரும்பவில்லை என்பது அவர்களுக்குக் கோடிகாட்டப்பட்டிருப்பதாகவும், அப்பதவிகளிலிருந்து தாமாகவே விலகிச் செல்வதற்கு அவர்களும் முன்வந்துள்ளனர் எனவும் கூறப்பட்டது.
அவர்கள் – பதவிகளை விட்டு விலகியதும் அவர்களது இடங்களுக்கு புதியவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார்.
இதேவேளை ஓய்வுக்குரிய காலம் கடந்த பின்னரும் இரண்டு தடவைகள் பதவி நீடிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர ரணசிங்கவை பதவி விலகிச் செல்லுமாறு புதிய அரசுத் தலைமை கோரியிருக்கிறது என்றும் தெரிகிறது.
எனினும் பொலிஸ்மா அதிபர் எம்.கே. இலங்கக்கோன் அப்பதவியில் தொடர்வதை புதிய ஜனாதிபதி விரும்புகிறார் என்றும் கூறப்பட்டது.