இராணுவ ஆட்சி முறைமை வடக்குக்கு தேவையில்லை: முதலமைச்சர்

vickneswaranதமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் தெரியாத இராணுவ ஆட்சி முறைமை தமிழர்களுக்கு தேவையில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

‘வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தல்’ என்னும் தொனிப்பொருளில் யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று (10) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

‘வடக்கில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பையும், சுதந்திரத்தையுமே எதிர்பார்க்கின்றார்கள் தவிர பெருந்தெருக்கள் அமைப்பதையோ, விடுதிகள் அமைப்பதையோ விரும்பவில்லை. போருக்குப் பிந்திய காலத்தில் மக்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடமாகாணசபை உருவாக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறார்கள் என மக்கள் மத்தியில் கேள்விகள் பல எழுந்துள்ளது. முதற்கட்டமாக கிராமமட்டத்தில் தொழில்சார் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

வடக்கிலிருந்து பல கல்விமான்கள், புத்திஜீவிகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீளவும் அவர்கள் இங்கே வருவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தினாலேயே அவர்கள் இங்கே வருவதை தவிர்க்கின்றார்கள். அவர்கள் இங்கு மீளவும் வந்து பிரதேசத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு அவர்களது பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் பேசவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

எங்கள் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் போரின் பின்னரும் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமலும், தமது விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையும் இன்றும் காணப்பட்டு வருகின்றன.

அகதி முகாம்களில் வாழ்வாதார நெருக்குவாரங்களுக்கு மத்தியில் எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் எமது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதோடு எமது நிலங்களில் இராணுவம் விவசாய நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எல்லா சமூகங்களும் இணைந்த ஒற்றுமையினை நாங்கள் விரும்புகின்றோம் தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் தெரியாத இராணுவ ஆட்சி முறைமை வடக்கு தமிழர்களுக்கு தேவையில்லை. இதனால் தான் இராணுவப் பின்னணி கொண்ட ஒருவர் ஆளுநராக இருப்பதை நாங்கள் எதிர்ப்பதோடு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செயலமர்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை, வடமாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts