அபிவிருத்தி என்ற பெயரில் அனைத்து துறைகளிலும் இராணுவ ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் இராணுவ ஆட்சி எமது அரசாங்கத்தில் இருக்காது. எமது ஆட்சியில் அதன் கடமையினை மட்டுமே இராணுவம் செய்யும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீட்டெடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை சார் வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றை நேற்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் மேற்கொண்டிருந்தார். இதில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுற்றுலாத்துறை நாட்டின் மிக முக்கிய வருவாய். அதில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது நாட்டின் அபிவிருத்தியையே வீழ்த்தி விடும். அவ்வாறானதொரு வரலாற்றுத் தவறினை இன்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்து வருகின்றது. பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி நாட்டின் சுற்றுலாத்துறையினரை கவர முடியாது. அதையும் தாண்டி நாட்டில் உண்மையான அபிவிருத்தியும் பாதுகாப்பும் இடம்பெற வேண்டும்.
சுற்றுலாத்துறையில் இருந்து அனைத்து அபிவிருத்திகளுக்கும் இராணுவத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தாக்கம் செலுத்தி நாட்டினை இராணுவ மயப்படுத்த முயற்சிப்பதனால் பலன் எதுவும் கிடைக்கப்போவதில்லை. எமது அரசாங்கத்தின் இராணுவம் அதன் கடமையினை மட்டுமே செய்யும். அதனைத் தாண்டிய இராணுவ ஆட்சிக்கு நாம் துணை போகமாட்டோம்.
மேலும் இன்று சர்வதேச மட்டத்தில் இலங்கை அதன் நிலையினை இழந்து விட்டது. உலக சுற்றுலா வரை படத்தில் இலங்கை மறைக்கப்பட்டு விட்டது. இந்நிலையினை மாற்றியமைக்க வேண்டும். அன்று இலங்கையை விடவும் கீழ் நிலையில் உள்ள நாடுகளின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி கண்டு விட்டது. இலங்கை பின்னடைந்து வருகின்றது. இந்த பெருமையும் புகழும் மஹிந்த ராஜபக்ஷவிற்கே சேரும்.
எனவே மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் உண்மையான அபிவிருத்தி முன்னெடுக்கப்படும். உண்மையான ஆட்சி நிலவும் வகையில் வர்த்தகர்களும் நன்மையடையும் பொருளாதார நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.