இராணுவம் வீதியை ஆக்கிரமித்ததால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் தையிட்டி மக்கள்

யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாது அயலவர்களின் வளவுகள் ஊடாகவே பயணிக்க வேண்டியுள்ளதென அப்பகுதியில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இராணுவத்தினரின் பிடியில் இருக்கும் பிரதான வீதியை விடுவிக்க பிரதேச செயலர், அரச அதிபர், மீள்குடியேற்ற அமைச்சு என்பன உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பாதிகப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலி. வடக்குப் பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் சில பகுதிகள் இராணுவத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுக்கப்பட்டன.

தையிட்டி தெற்குப் பகுதியும் கடந்த வருட இறுதியில் மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டது. அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறி வருகின்றனர். அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில் தையிட்டி தெற்கு விடுவிக்கப்பட்டு 8 மாதங்கள் கழிந்துள்ளபோதும் தையிட்டி பிரதான வீதி இன்னமும் இராணுவத்தின் வசமே உள்ளது. இந்த வீதியை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதால், வீட்டு வளவுகளின் ஊடாகவே தமது வீடுகளுக்கு மக்கள் செல்ல முடிகிறது.இதனால் சொந்த நிலம் விடுவிக்கப்பட்டும் சொந்த வீட்டுக்கு சுதந்திரமாக செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை நீடிப்பதாக தையிட்டி தெற்கு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த வீதியை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்துத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts