இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதேவேளை யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று பிற்பகலில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் குவிக்கப்பட்டனர்.

இன்று காலையும் மேலதிகமாக அங்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் கொண்டுவந்து இறக்கப்பட்ட படையினர் அப்பகுதியால் சென்று வருபவர்களை மறித்து சோதனை மற்றும் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர்

குறிப்பாக யாழ்.பல்கலைக்களகத்தினை சூழ உள்ள இராமநாதன் வீதி, ஆடியபாதம் வீதி, பிறவுண் வீதி, பலாலி வீதி, பரமேஸ்வர கல்லூரி வீதி உள்ளிட்ட வீதிகள் முழுவதிலும் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு செய்தி செகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்களை வழிமறித்த பொலிஸார் அவர்களின் மோட்டார் சைக்கில் திறப்பினை பறிமுதல் செய்து இரு ஊடகவியலாளர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.

அப்பகுதியில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் மேற்கொண்டதற்கான இருவரையும் கைது செய்யப் போகின்றோம் என்று கூறிய பொலிஸார் அவர்களின் கமெராக்களை பார்வையிட்டு, அதில் உள்ள பதிவுகளை அழிக்குமாறு உத்தரவிட்டனர்.

இல்லாவிட்டால் கைது செய்து சிறையில் அடைப்போம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் தமது மேல் அதிகாரிகளுடன் பொலிஸார் தொடர்பு கொண்டனர்.

மேல் அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கைது செய்வதை தவிர்த்த பொலிஸார் இரு ஊடகவியலாளர்களையும் கடும் தொணியில் எச்சரிக்கை செய்து அங்கிருந்து விடுவித்தனர்.

Related Posts