இராணுவம் காணிகளை விடுவித்தால்தான் பொலிஸாராலும் விடுவிக்க முடியுமாம்!

உயர் பாதுகாப்பு வலயத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ளார்கள். அந்த காணிகளை விடுவித்தால் தான் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் மக்களுடைய காணிகளை தம்மால் விடுவிக்கமுடியும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான சிவில் பாதுகாப்பு கூட்டம் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொலிஸார் வசம் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடைய வீடுகளை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசும் போதே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இதில் பொலிஸார் வசம் உள்ள ஒரு உணவகத்தினை குறுகிய காலத்திற்குள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பொலிஸார் இணங்கியுள்ளனர்.

மற்றும் காங்கேசன்துறையில் மக்களுடைய வீடுகள் பொதுமக்களின் காணிகள் போன்றன பொலிஸாருடைய பயன்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றன.

இந்த நிலையில் பொலிஸாரிடம் உள்ள உணவகங்கள், வீடுகளை உரிமையாளர்களிடம் மீள வழங்கப்படவேண்டும் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது ஒரு உணவகத்தினை மிக குறுகிய காலத்திற்குள் உரிமையாளரிடம் வழங்குவதற்கு பொலிஸார் இணக்கம் தெரிவித்திருக்கும் அதேவேளை காங்கேசன்துறையில் பொலிஸாரின் பயன்பாட்டில் உள்ள வீடுகள் மற்றும் காணிகளை விடுவிக்க தொடர்ந்தும் கால அவகாசத்தை கோரியுள்ளனர்.

குறிப்பாக உயர்பாதுகாப்பு வலயத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கான 5 மாடி கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடம் ஒன்று இல்லாமையினாலேயே மக்களுடைய வீடுகளை உடனடியாக வழங்க இயலாத நிலை காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் பொருத்தமான இடம் ஒன்று கிடைக்கும் பட்சத்தில் மக்களுடைய வீடுகள் மற்றும் காணிகள் உடனடியாக உரிமையாளர்களிடமே மீள வழங்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பினர் உறுதியளித்துள்ளனர்.

Related Posts