இராணுவமே எமது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது : வள்ளுவர்புர மக்கள்

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து தாம் இடம்பெயர்ந்த போது தங்களுடைய வீடுகள் நிலம் எவ்வாறு காணப்பட்டதோ அதே போன்று மீண்டும் வழங்கப்படவேண்டும் என வலிகாமம் வடக்கு தையிட்டி- வள்ளுவர் புரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

vethaa

தமது காணிகளை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் மீண்டும் மக்களிடம் எவ்வாறான நிலையில் கையளிக்கின்றார்கள் என்பதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காணி உரிமையாளர்களுடன் நேரடியாக சென்று பார்வையிட வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு கடந்த 31 ஆம் திகதி திங்கட் கிழமை விஜயம்செய்திருந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 454 ஏக்கர் காணிகளை மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாக அறிவித்தார்.

இவ்வாறு வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட 454 ஏக்கர் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு பார்வையிட இராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து தமது காணிகள் மற்றும் வீடுகளை கடந்த 27 வருடங்களின் பின்னர் ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டதை கண்டு கவலையடைந்தனர்.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது தம்மால் கைவிட்டுச் செல்லப்பட்ட வீடுகள், நிலையான பயிர்களான தென்னை மா உள்ளிட்ட மரங்களை இராணுவத்தினர் வெட்டியதுடன், வீடுகளை தரைமட்டமாக்கியதனால் மக்கள் குடியிருப்பு காணப்பட்டமைக்கான அடையாளம் இல்லாமல் போயுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது பிரதேசத்தில் யுத்தம் இடம்பெறவில்லை என தெரிவித்த மக்கள் தமது வீடுகள் இராணுவத்தினராலே இடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டம் முழுமைப்படுத்தப்படாது காணப்படுவதாக தெரிவித்துள்ள மக்கள், வீட்டுத்திட்டத்திகாக வழங்கப்படும் பணத்தின் ஊடாக முழுமையான வீட்டை அமைக்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts