இராணுவப் பிரசன்னம் பிரிவினை வாத கருத்துக்களுக்கு வித்திடலாம் – முதலமைச்சர்

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காகவே வடக்கில் இராணுவம்
நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை சர்வோதய சிரமதான அமைப்பின் 57 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றினால் நாட்டிலுள்ள எந்தவொரு பிரச்சினையையும் இலகுவில் தீர்க்க முடியும் எனவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் .

எமது அரசியல்வாதிகள் அடுத்ததாக எதிர்கொள்ள வேண்டிய தேர்தல்கள் மற்றும் அதில் வெற்றிபெறுவது தொடர்பில் சிந்திக்காமல், சமூகத்திற்காக நிறைவேற்ற வேண்டியுள்ள கடமைகளை நிறைவேற்றினால் நாட்டிலுள்ள எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும். இந்த இனப் பிரச்சினையையும் இலகுவில் தீர்க்க முடியும்.

“யுத்தம் நிறைவுற்று 5 வருடங்கள் கடந்தும் வடபகுதி மக்கள் மத்தியில் பிரிவினைவாத கருத்துக்கள் உருவாகலாம் என்ற அச்சத்தால் இராணுவம் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இராணுவப் பிரசன்னமே பிரிவினை வாத கருத்துக்களுக்கு வித்திடலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இராணுவத்தின் கடமை நிறைவுபெற்றிருப்பின், அவர்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். மக்கள் அவர்களது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இடமளிக்க வேண்டும். தேர்தல் நடாத்தப்பட்டு வடமாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இராணுவம் அவர்களது இரகசிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வடக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என அதிகாரமிக்கவர்கள் நினைக்கின்றனர்”

வடமாகாணத்தில் இராணுவத்தினரால் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்

“இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கொலை மற்றும் தாக்குதல் நடத்தி பாரதூரமான காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இராணுவத்தை தற்போது மனிதாபிமான சேவைக்காக அங்கு நிலைநிறுத்தியுள்ளதாக கூறினால் அதனை நம்பப்போவது யார்? அதனை நம்புவது யார்?”

என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts