கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள தனியார் காணி உரிமையாளர் கிராம சேவையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிலைமையை ஆராயச் சென்ற கிராம சேவையாளர்கள் மீது தென்னிலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியதுடன், 593 ஆவது பிரிகேட் இராணுவ அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து, கிராம சேவையாளர்களின் அடையாள அட்டையைப் பறித்து அச்சுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலேயே கிராம சேவையாளர்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியுள்ளனர். முற்பகல் 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்குச் சென்ற கிராம சேவையாளர்கள், மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
இதன்போது, ‘இராணுவமே சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடாதே’, ‘இராணுவமே இராணுவக் கடமைகளுடன் மட்டும் நின்றுகொள்’, ‘இராணுவமே அரச ஊழியர்களின் கடமைகளிற்கு இடையூறு விளைவிக்காதே’, ‘அரச அதிகாரிகளே உங்களின் கீழ்நிலை உத்தியோகத்தர்கள் தாக்கப்படும்போது மௌனமாக இருக்காதீர்கள்’, ‘அரசே சிவில் உத்தியோகத்தர்கள் சுயமாக பணியாற்ற உரிய வழிவகை செய்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.
மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் இல்லாத காரணத்தால், மேலதிக அரச அதிபரிடம் கிராம சேவையாளர்கள் தமது மகஜரைக் கையளித்தனர். இதன் பின்னர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு திரும்பி வந்து, அங்கும் சில மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.