இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும் – யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

இதில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி,

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காகவே நாம் கூடியுள்ளோம்.

குறிப்பாக 90 இராணுவ வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதனை ஆளுநர் மற்றும் அரச அதிபருடன் கலந்துரையாடி அதனடிப்படையிலே இன்று பிரதேச செயலர்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை விளக்குவதற்காகவே கூட்டத்தில் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒரு சிலரே தற்போது இராணுவத்தில் இணைந்து கடமை ஆற்றி வருகின்றார்கள். ஆனால் இராணுவத்தில் இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் யாரும் இணைந்து கடமை ஆற்ற முடியும். அதற்கு தடையில்லை. அது தொடர்பாக எமது இராணுவ தளபதியும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.

தற்போது உள்ள covid-19 நிலைமையின் காரணமாக பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாது அங்கேயும் இங்கேயும் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. சில இளைஞர்கள் covid 19நிலைமை காரணமாக தனியார் துறைகளில் வேலைசெய்தவர்கள் வேலை இழந்து தவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு கோரிக்கையினை விடுக்க விரும்புகின்றேன். நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனைய வேலை வாய்ப்புகளை விட இந்த இராணுவ வேலை வாய்ப்பானது மிகவும் விசேடமான ஒரு வேலை வாய்ப்பாகும். குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புகள் ஏனைய அரச வேலைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது.

இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கு இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அத்துடன் மேசன், தச்சு, மின் இணைப்பாளர் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த வேலைகளில் இணைவதன் மூலம் எமது யாழ்ப்பாண குடாநாட்டினை மேலும் விருத்தி அடையச் செய்ய முடியும்.

கிராம அலுவலர்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் சென்று இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அவ்வாறு விளங்க படுத்துவதன் மூலமே இளைஞர் யுவதிகளுக்கு சரியான புரிதல் ஏற்படும். எனவே கிராம சேவையாளர்கள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுகின்றார்கள். குறிப்பாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சுகாதாரப் பிரிவினர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இணைந்து கொரோனாவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

அதேபோல நான் இன்னும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பலர் உரையாடுகிறார்கள். அவர்களும் குறித்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தங்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.

நான் இராணுவத்தில் இணைந்த போது எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு கப்டன் தர தமிழ் அதிகாரி மகேந்திரன் எனப்படும் ஒருவர். எனவே இதனை எல்லாம் நீங்கள் உதாரணமாக கொண்டு நாம் எமது நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். 1982ஆம் ஆண்டு நான் உயர்தர பரீட்சை எழுதும்போது இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடு எனவே பரீட்சை எழுதி இருந்தேன். அதேபோல் எனது மகன் 2012ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் போதும் இலங்கையை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று எழுதியிருந்தார்.

இவ்வாறே எமது எதிர்கால சந்ததியினரையும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என எழுத அனுமதிக்க போகிறோமா இல்லையா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும். மேலும் கடந்த 30 ஆண்டு யுத்தத்தின் காரணமாக நாம் அனுபவித்ததை நாமினி மறப்போம். கடந்ததை மறந்து நாம் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் இந்த கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் பொதுமக்கள் இணைந்து செயற்படுவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஏனைய பிரதேசங்களை போல அல்லாது யாழ் குடாநாட்டில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதற்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். அத்தோடு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலும் ஒரு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது. அதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவம் இதற்கு உறுதுணை வழங்கி வருகின்றது.

அதேபோல பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் மற்றும் ஏனைய துறையினர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள். எனவே எமது நாட்டினை அபிவிருத்தி நோக்கிய செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே பிரதேச மட்டங்களில் கிராம சேவகர்கள் குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியு.ம் அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது என்றார்.

Related Posts