யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்த தமிழ் இராணுவ பெண் புற்று நோய் காரணமாகவே உயிரிழந்தார்.
அவருடைய இறப்புக்கு வேறு எந்தக் காரணங்களும் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி பவானி பசுபதிராசா.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஊடக சந்திப்பு ஒன்று வைத்தியசாலைப் பணிப்பாளரால் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இராணுவத்தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் அஜந்தா (வயது – 23) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சேர்க்கப்பட்டார்.
சத்தி, வயிறு வீக்கம் போன்ற நோய்களுடன் பலாலி படைத்தளத்தில் உள்ள வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் இங்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இவரை பரிசோனை செய்த வைத்தியர்கள், இவருக்கு புற்று நோய் உண்டென்பதை அறிந்து வைத்தியசாலை புற்று நோய் விடுதியில் சேர்த்துச் சிகிச்சை வழங்கினர்.
குறித்த பெண் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புற்று நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார் என்பதையும் அறியக் கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் இவருக்கு சூலகத்தில் ஏற்பட்ட புற்று நோயானது அதிகரித்து குடலில் தடைகளை ஏற்படுத்தியமையால் மரணம் ஏற்பட்டுள்ளது.
இவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் ஏற்கனவே இவருடைய மரணம் புற்று நோயால் ஏற்பட்டதென குறிப்பிட்ட வைத்தியர் சிபாரிசு செய்துவிட்டார் – என்றார்.
தொடர்புடைய செய்தி
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்