எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
எமது வேகமும் உத்வேகமும் இனி கண்கூடாகப் பார்க்கும் அளவிற்கு கடுகதியில் செல்ல வேண்டியிருக்கின்றது. இன்னும் இரு வருடங்களில் பலதையும் நாங்கள் சாதித்துக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கிடையில் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
அவற்றிற்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. இவை எல்லாவற்றிற்கும் உங்கள் ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பையும் உதவியையும் வேண்டி நிற்கின்றேன். எம்மால் முடியும் என்பது எனது கருத்து. இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். சூழலுக்கு ஏற்றவாறு தீர்மானங்களை எடுத்தல் அவசியம்.
ஆனால் எம்முள் சிலரின் கடந்த கால வாழ்க்கை முறையுந் தற்கால நடைமுறைகளுஞ் சற்று வேறுபட வேண்டும். வடமாகாணசபை வரமுன்னிருந்த காலம் வித்தியாசமானது. இப்பொழுது மக்களே மக்களை ஆளுங் காலம். ஆகவே நாங்கள் யாவரும் எமது மக்கள் சார்பில் கடமையாற்றுகின்றோம் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது.
மக்கள் என்று கூறும் போது உங்கள் ஒவ்வொருவரினதும் குடும்பங்களும் உற்றார் உறவினர்களுங் கூட அச்சொற் பதத்தினுள் அடங்குவர். எங்கோ இருக்கும் மத்திக்கோ சுயநலத்துடன் எம்மை அண்டப்பார்க்கும் மத்தியின் அமைச்சர்களுக்கோ மற்றையவர்களுக்கோ நாங்கள் ஜால்ரா தாளம் போட வேண்டிய காலத்தை நாம் இப்பொழுது தாண்டிவிட்டோம்.
வெகு விரைவில் அரசாங்க அதிபர்கள்கூட எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட இருக்கின்றார்கள். எமது மக்களுக்கு எது நன்மை பயக்கும், மத்தியின் எந்தெந்த உள்ளீடல்கள் எமக்குத் தீமை பயக்கும் என்பதை எல்லாம் நாம் யாவரும் நன்கு ஆராய்ந்து, உணர்ந்து செயற்பட வேண்டிய காலம் இது.
உதாரணத்திற்கு இராணுவத்திற்குப் பயந்து காடுகளையோ, வீடுகளையோ, காணிகளையோ அவரிகளிடம் கையளித்திருந்தீர்களானால் அது நீண்ட காலப் பாதிப்பை எம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
காணிகளைக் கையேற்கும் சட்டத்தின் கீழ் பொது நோக்கத்திற்காகக் காணிகளைச் சுவீகரிக்கலாம் என்பது இராணுவ முகாம் கட்டுவதற்கும் முடியும் என்று சில அலுவலர்கள் தீர்மானித்து போர் முடிந்த பின்னர் கூட இராணுவம் கேட்டவாறே அவற்றைக் கொடுத்தும் வந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இராணுவத்தினரின் தோழமையும் உதவிகளும் கிடைத்தது உண்மைதான். ஆனால் அவ்வாறு செய்ததால் நாம் எமது மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டோம் என்பதை மறக்கக்கூடாது.
இப்பொழுது வரும் போது தான் பத்திரிகையில் இராணுவப் பேச்சாளர் திரு. ஜயநாத் ஜயவீர அவர்கள் இராணுவத்தை வடமாகாணத்தில் இருந்து அகற்றினால் அசம்பாவிதங்கள் நடைபெறும் என்று கூறியிருப்பதைப் பார்த்தேன். வடமாகாணத்தில் யாரால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்று தெரியவில்லை.
இராணுவம் போர் முடிந்து 7 வருடங்களின் பின்னர் இங்கு தரித்து நிற்பதே எமது பிரச்சனை. எங்கள் காணிகளை எடுத்துள்ளனர்; வீடுகளை எடுத்துள்ளனர்; வளங்களைப் பாவிக்கின்றனர்; வணிகத் தொழில்களை எடுத்துள்ளனர் எமது பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அசம்பாவிதங்கள் இராணுவம் இருப்பதால்த்தான் ஏற்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வடமாகாணத்தை விட்டுப் போய்விட்டால் பொலிசார் எமது பாதுகாப்பைப் பார்த்துக் கொள்வார்கள். அசம்பாவிதங்களும் நடைபெற மாட்டாது என்ற கருத்தை இங்கு கூற விரும்புகின்றேன்.
எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல.
உங்கள் ஒவ்வொருவரின் பழைய கால நடைமுறைகள், உங்கள் பழைய சிநேகங்கள், நேயங்கள், குறைபாடுகள் யாவையும் அப்போதைக்கப்போது எமக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றை வைத்து உங்களைப் பழிவாங்கவோ இம்சைப் படுத்தவோ நாங்கள் முனையவில்லை.
புதிய சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றி மக்கள் சார்பாக நடந்து கொள்ளுங்கள் என்றும் பலவிதமான ஊழல்களுக்கு நீங்கள் பலியாகாதீர்கள் என்றுமே நாங்கள் கூறி வந்துள்ளோம். அதையே இப்பொழுதும் கூறி தயவு செய்து உங்கள் கடமைகளிலும் மக்கள் நலனிலும் தகுந்த சிரத்தையும் ஊக்கமும் உற்சாகமும் காட்டுங்கள் என மேலும் தெரிவித்தார்.