இராணுவத்தின் காவலரணை அகற்றுக ; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வலி. விடக்கு அச்சுவேலியினூடாக தெல்லிப்பளைக்குச் செல்லும் பிரதான வீதியான வயாவிளான் – தோலகட்டி வீதியை விடுவிக்குமாறு வலியுறுத்தி பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வயாவிளான் – தோலகட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள இராணுவத்தின் காவலரணை அகற்றி, வீதியை திறந்துவிட வேண்டும் எனக் கோரியே இன்று காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 4 ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள நிலையில், வடமாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில், வலி. வடக்கு பகுதியிலுள்ள பலாலி, வயாவிளான், மயிலிட்டி பகுதி மக்களின் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

கட்டம் கட்டமாக மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வலி. வடக்கு மக்கள் வாடகை வீடுகளிலும் தனியார் வீடுகளிலும், முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இராணுவத்தின் காவலரண் அமைந்துள்ள வயாவிளான் தோலகட்டி பிரதான வீதியை விடுவிக்குமாறு கோரி இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் முடிவடைந்ததும் உனக்கு எம் நிலம் எதற்கு, இந்த மண் எங்களின் சொந்த மண், எமது நிலங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்று, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts