இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது!

இலங்கை இராணுவத்தின் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் இவ்வாறு இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது.

இணைய தளத்திற்குள் அத்து மீறி பிரவேசித்த ஒரு தரப்பு அரை மணித்தியாலம் இணைய தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இராணுவத்தின் உத்தியோகபூர்வ விபரங்களை மாற்றியதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் உருத்ரகுமாரனின் புகைப்படமொன்றையும் இணைய தளத்தில் பிரசூரித்துள்ளனர்.

எவ்வாறெனினும் துரித கதியில் செயற்பட்ட படையினர் இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை கட்டுப்பாட்டை மீளவும் பெற்றுக்கொண்டதுடன் தேவையற்ற தகவல்களை நீக்கியுள்ளனர்.

நாச வேலைகளை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறு இணைய தளம் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இணைய தளங்கள் மீதான ஊடுறுவல்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளது என இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Related Posts