இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
வலி.வடக்கு கட்டுவன் பகுதியில் உள்ள பொதுமக்களது வீடுகளை அண்மைக்காலமாக இராணுவத்தினர் இடித்தழித்து வருகின்றனர். எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சில தலையீடுகளினால் நிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் கடந்த மூன்று தினங்களாக மீண்டும் இடித்தழிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர். அதனை நேரடியாக பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை மற்றும் நகரசபையைச் சேர்ந்த உறுப்பினர்களும் இன்றைய தினம் சென்றிருந்தனர்.
அங்கு வந்த இராணுவ அதிகாரி உள்ளிட்டவர்கள் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்போது அவர்களைப் படம்பிடிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதுடன் அவர்களின் படப்பிடிப்புக் கருவிகளும் அவர்களால் பலவந்தமாக பறிக்கப்பட்டு படங்களும் அழிக்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வலி. வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டு வருவதாக தகவல் அறிந்து நேரடியாக பார்வையிடுவதற்கு வடமாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன் , வலி வடக்கு உப தவிசாளர், வலி தெற்கு தவிசாளர் மற்றும் நகர , பிரதேச சபை உறுப்பினர்களும் சென்றிருந்தோம்.
அங்கு சென்ற நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு செல்லவில்லை. இராணுவத்தினர் எல்லைப்படுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வெளியே அதாவது மக்கள் பகுதியில் தான் நின்றிருந்தோம்.
அப்போது ஒரு வீடு எங்கள் கண் முன்னே புள்டோசரால் இடிக்கப்படுவதைக் கண்டோம். அவற்றை நாம் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர்கள் அவற்றை படம் பிடித்துக் கொண்டு நின்றனர்.
அப்போது தான் ஒரு பிரிகேடியர் என்று கூறிக் கொண்டு மிக வேகமாக அவ்விடத்திற்கு வந்த அதிகாரி உள்ளிட்ட இராணுவத்தினர் எங்களுடன் வாக்குவதாத்தில் ஈடுபட்டார்.
அத்துடன் இங்கு படம் எடுக்க முடியாது.படங்கள் எல்லாவற்றையும் அழியுங்கள் என்றும் அச்சுறுத்தும் பாணியில் கூறினார்.
அப்போது குறித்த இராணுவ அதிகாரி இங்கு இராணுவத்தினரின் முகாம் உள்ளது. பார்க்கத்தெரியவில்லையா உங்களுக்கு நீங்கள் படம் எடுக்க கூடாது என்றார்.
அதன்போது அவருடன் வந்திருந்த இராணுவத்தினர் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கிப் சென்று அவர்களின் புகைப்படக் கருவிகளை பலவந்தமாக பறித்து அதில் இருந்த படங்களையும் அழித்துக் கொண்டார்.
அவர்கள் எம்முடன் வந்து வாக்குவாதப்பட்ட இடம் இராணுவத்தினரால் போடப்பட்ட எல்லைக்கு வெளியே. நாமும் அவர்களும் தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.
அதன்போது குறித்த அதிகாரி தேவைப்பட்டால் தனது அதிகாரத்தைப் பாவித்து இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என என்னையும் என்னுடன் நின்றிருந்தவர்களையும் மிரட்டியதுடன் காட்டுமிராண்டித் தனமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டிருந்தார்.
இது நாடாளுமன்ற உறுப்பினரான எனது சிறப்புரிமையினை மீறுகின்ற செயலாக அமைகின்றது. தொடர்ந்தும் அவரிடம் கேட்டிருந்தோம் இவ்வாறு உங்களின் இடங்களில் செய்வீர்களா என்று அப்போது அவர் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா இராணுவத்தினரையும் இங்கேயே கொண்டுவரப் போவதாகவும் அவர்களது குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கப்படவுள்ளது என்றார்.
அப்போது தான் 6500 ஏக்கரிலும் இராணுவ குடும்பங்களுக்கும் வலி.வடக்கில் வீடுகள் அமையவுள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் அரசாங்கம் இங்கு எங்குமே உயர்பாதுகாப்பு வலையம் ஒன்று இல்லை என எமக்கும் சர்வதேசத்திற்கு கூறிவருகின்ற நிலையில் குறித்த அதிகாரியின் நடவடிக்கை நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான அறிகுறியாக தென்படவில்லை.
இதனை நான் அவருக்கும் நேரடியாக கூறினேன். எனினும் அவர் நீங்கள் மேலிடத்தில் போய் கூறுங்கள் இந்த நிலம் இராணுவத்திற்கு சொந்தமானது என வர்த்தமாணியில் அறிவிக்கப்பட்டு விட்டது என தெளிவாக கூறினார் என்றார்.