வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் எல்லையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளின் உண்மையான விபரங்கள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படாமையால், தான் அறிக்கையொன்றைத் தயாரித்து கையளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட நாட்டின் அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் கடந்த மாதம் 22ஆம் திகதி சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது முல்லைத்தீவு எல்லை கிராமங்கள், கேப்பாபிலவு மற்றும் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு மயிலிட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தியதாக தெரிவித்த முதலமைச்சர் குறித்த காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கையினை வழங்குமாறு சிறீலங்காவின் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வடமாகாண சபை கோரிய தொகையில் 3 இல் ஒரு பகுதியே வழங்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியில் 3 ல் ஒரு பங்கே எமது கைகளில் கிடைத்திருக்கின்றது.
2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் 1500 மில்லியன் ரூபாவை அண்மித்தாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் 2016 ஆம் ஆண்டு 3600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள போதிலும் 900 மில்லியன் ரூபாவே கிடைத்ததாக குறிப்பிட்டார்.