இராணுவத்தினர் தாக்கியதில் மதுபோதையில் இருந்தவர் மரணம்!

யாழ். தென்மராட்சியின் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கும் இவரது சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போதே இராணுவத்தினர் குறுக்கிட்டுள்ளனர். இதன்போது மது போதையிலிருந்த இவர் இராணுவச் சிப்பாய் ஒருவரை பலமாக தாக்கியுள்ளார்.இதன்போது ஒன்றுகூடிய இராணுவத்தினர் குறித்த நபரை சராமரியாகத் தாக்கியுள்ளனர்.

மேலும் சீமெந்து போடப்பட்டிருந்த வீதிக்கு வைக்கும் பாரமான மர றீப்பை கட்டை ஒன்றினால் இவரது தலையில் பலமாக தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளார்.இந்நிலையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆயினும் எந்தவிதமான குளிரூட்டி வசதிகளும் இன்றி குறித்த சடலம் நேற்று காலை 9 மணிவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.ஆயினும் இச்சம்பவத்தை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரியும் கொடிகாமம் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகின்றது.

குறிப்பாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ளும் வைத்தியர் அழைத்து வரப்படவில்லையென்பதோடு, சாவகச்சேரி நீதிவான் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே பொலிஸார் விசாரணைகளை ஒரு பக்கமாக திருப்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் சார்பாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts