சிறீலங்கா இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் ஒன்றிணைவதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிங்கள இராணுவத்துடன் முன்னாள் போராளிகளும் தமிழ் இளைஞர்களும் இணைய முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கு றெஜினோல்ட் குரே கால்நடைகளை வழங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும்போது,
புத்தபெருமான் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் மதம், இனம், மொழி அனைத்தையும் மறந்து ஒற்றுமையாக வாழவேண்டுமெனப் போதித்தார். இந்தப் புண்ணிய நாளில் இணைந்து எல்லோரும் புண்ணியம்தரக்கூடிய ஒரு வேலையைச் செய்துள்ளோம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த மக்களுக்கு பசுமாடுகளை வழங்கி அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளோம்.
நாட்டில் வாழுகின்ற இந்து மதத்தவரைப் பொறுத்தவரை பசு அவர்களின் தெய்வம். சிவபெருமானின் வாகனம். இந்துமதம் பசுமாடுகளை கொலைசெய்வதைத் தடைசெய்யுமாறு கோரி வருகின்றது. அதையே ஆளுநராகிய நானும் விரும்புகின்றேன்.
இந்த பசுமாடுகளை நன்றாக வளர்த்து அவற்றிலிருந்து பாலையெடுத்து உங்களது பொருளாதாரத்தினை உயர்த்திக்கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றேன் என்றார்.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பிரதேசச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.