இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பது தேசிய பாதுகாப்பா?

மைதானங்களில் வைத்து பலர் பிடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமற்போனமை தொடர்பில் தகவல் இல்லை. கேட்டால் தேசிய பாதுகாப்பு என்கின்றனர். இராணுவத்தினரின் குற்றங்களை மறைப்பது தேசிய பாதுகாப்பா?’ என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் எத்தகைய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தெளிவு வேண்டும். அரசின் பாதுகாப்பு அல்லது தேசிய பாதுகாப்பை பாதிக்கும் தகவல்களை பெறமுடியாது.

தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் செய்யப்பட்ட கைதுகள், கடத்தல்கள், இரகசியமாக கொண்டு செல்லுதல் என்பவை தொடர்பில் கேட்டால் தாங்கள் செய்யவில்லையென்பார்கள்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று கேட்டால் தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பர்.

ஆட்கடத்தல்களும், கொலைகளும் தேசிய பாதுகாப்பு என்பதற்குள் மாறுகின்றதா? எனவே, தேசிய பாதுகாப்பு வரையறுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது’ என்றார்.

‘கொண்டு செல்லப்பட்டவர்களை மீட்க ஆட்கொணர்வு மனுவும் வேலையில்லை. கொண்டு செல்லப்பட்டவர்கள் உயிருடன் இல்லையென அரசாங்கம் சாதாரணமாக சொல்கின்றது.

அவர்களின் நிலைபற்றி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களை யார் உரிமை கோரலாம் என்பதும் தெளிவுபடுத்தப்படவேண்டும். தாய், தந்தை, சகோதரர் தவிர்ந்த வேறு யாரும் சென்று கேட்டால், உனக்கு ஏன் என்கின்றனர்.

இது பொதுநலம் சார்ந்த விடயம். இதில் யாரும் கேள்வி கேட்கலாம்.

கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இன்றுவரையில் அவர்கள் மறைக்கின்றார்கள். எனவே, முப்படைகளால் பிடிக்கப்படுபவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த விடயம் இங்கு தெளிவற்று இருக்கின்றது’ எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts