இராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு அரசே பொறுப்பு நீதிமன்றில் மனைவி கண்ணீருடன் சாட்சி

இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ்வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார்.

காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது வழக்காளி நேற்று குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.

வழக்காளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.என்.ரத்னவேல் முன்னிலையானார். வழக்காளி தனது சாட்சியத்தில், ஏன் இடம் பெயர்ந்தோம் என்பது தொடர்பிலும், எந்தப் பாதையினூடாக எங்கெங்கு இடம்பெயர்ந்து சென்றோம் என்பது தொடர்பிலும் முழுமையான சாட்சியத்தை முன்வைத்தார்.

மாத்தளன் வைத்தியசாலை மீது விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் பலர் கொல்லப்பட்டதையும், இரசாயனக் குண்டு வீச் சுக்கள் இடம்பெற்றதையும் அவர் தனது சாட்சியத்தில் முன்வைத்திருந்தார். அவர் தனது சாட்சியத்தில், இறுதிக் கட்டத்தில், இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை சரணடையுமாறும், சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதையடுத்து ஒரு கால் இழந்த நிலையில் எனது கணவரை இராணுவத்தினரிடம் கையளித்தேன். அதன் பின்னர் எந்தத் தகவலும் அவரைப் பற்றிக் கிடைக்கவில்லை. அரசே தனது கணவருக்கு முழுப் பொறுப்பு. நீதிமன்றத்தில் அழுதழுது தனது சாட்சியத்தை முன் வைத்தார்.

இதன் பின்னர் அரச தரப்பு சட்டத் தரணி, பொய்யான கருத்துக்களை வழக்காளி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஒத்திவைக் கப்பட்டது.

Related Posts