இராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் புத்துணர்வு பெற்றது

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பிமலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தரவை மாவீரர் துயிலும் இல்லம் நேற்று (திங்கட்கிழமை) துப்பரவு செய்யப்பட்டது.

ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பிமலையிலுள்ள சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து இந்த சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தரவைப் பிரதேசமும் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லமும் கடந்த 2007ஆம் ஆண்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, மாவீரர் துயிலும் இல்லம் படையினரால் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த பகுதிக்குச் பொதுமக்கள் செல்ல முனைந்த போதும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது குறித்த பிரதேசத்திற்கு செல்வதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

Related Posts