கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையோரமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த பாரிய மண் அணை, கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்படுகின்றது.
குறித்த பகுதி, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் படிப்படியாக மீள்குடியேறி வருகின்றனர்.
யுத்த காலத்தின் போது, இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு இரண்டு கிலோமீற்றர் நீளம் வரையாக குறித்த அணைக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.
இவ் அணைக்கட்டால் மீன்பிடியில் ஈடுபடுவோர் தமது படகுகளை கரைகளில் நிறுத்த முடியாது சிரமப்பட்டனர்.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, மீள்குடியேற்ற அமைச்சினால் குறித்த மண் அணைக்கட்டு அகற்றப்பட்டுள்ளது.
இவ் மண் அணைக்கட்டு அகற்றப்பட்டு வருவதால் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைக்க முடியும் என மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.