முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரத்தினை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15.05.2023) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்றலில் மாடு கடத்தலில் ஈடுபட்ட போது பிரதேச இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
முள்ளியவளை பகுதியில் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்காக கால்நடை வளர்த்து வரும் நிலையில் கால்நடைகள் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ளன.
இந்த நிலையில் இறைச்சிக்காக மாடு கடத்தும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் மாடுகளை கடத்துவதாக பிரதேச இளைஞர்களுக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் முள்ளியவளை இளைஞர்கள் விழிப்படைந்துள்ளார்கள்.
இதனையடுத்தே நேற்றைய தினம் இரவு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் மோட்டார்சைக்கிளை வேறு இடத்தில் விட்டுவிட்டு ஆலய சூழலுக்கு அருகில் நின்ற மாட்டினை பிடிப்பதற்காக கயிறு எறிந்த வேளை பிரதேச இளைஞர்களால் ஒருவர் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.
மற்றைய நபர் தப்பியோடிய நிலையில் நீண்ட நேரத்தின் பின்னர் முள்ளியவளை இளைஞர்களிடம் வந்து சரணடைந்துள்ளார்.
முள்ளியவளை பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.