இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
குறித்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்.
இதன் விளைவாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணிகளை மாத்திரம் விடுவிக்கப்பதாக, கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உறுதியளித்திருந்தார். எனினும், பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சகல காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியே மக்கள் நேற்றுமுதல் இத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேற்று இரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் சென்று தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும்போது, இராணுவம் அவர்களது வீடுகளை அபகரித்து வைத்திருப்பது கொடுமையானதும் கேவலமானதும் என்றும் அரசாங்கம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.