இரந்துண்ணும் ஏதிலிகளாக மாற்றப்பட்டுள்ளனர் : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

‘முன்னைய அரசியல் தலைமைகள், தமது அரசியல் சுயலாபங்களுக்கும் தமது நாடாளுமன்ற இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அப்பாவிச் சிங்கள மக்களை பிழையான வழிகளில் நெறிப்படுத்தி, அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும் இனவாதத்தைத் தூண்டக்கூடிய பிரசாரங்களையும் முடுக்கிவிட்டமையால் தான், இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின’ என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றுத் திங்கட்கிழமை (19) கூறினார்.

‘இந்த நாட்டில் ஏற்பட்ட நீண்டகால யுத்தம், இங்கிருக்கும் எமது அனைத்து இருப்புக்கள், கல்வி நடவடிக்கைகள், பொருளாதாரம், பண்பாடு, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பாதித்து விட்டது. தற்போது எமது அனைத்தையும் இழந்த நிலையில், ஏதிலிகளாக இரந்துண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்’ என்றும் அவர் கூறினார்.

இளைஞர் கொள்கைகள் செயற்றிட்டம் தொடர்பில், பங்குதாரர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது,

‘வடபகுதி இளைஞர் – யுவதிகள், ஒரு காலத்தில் கல்வியில் மேம்பட்டவர்களாகவும் ஒழுக்கச் சீலர்களாகவும் உலகெங்கும் போற்றப்படுகின்ற அல்லது அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பண்பட்ட இனம் அல்லது சமூகம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. இன்றைய இளைஞர் – யுவதிகள், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்.

வெளிநாட்டுப் பணங்களை, அதன் அருமை தெரியாமல், ஊதாரித்தனமாக செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். கல்வி மீதும் ஒழுக்கம் மீதும், பண்பட்ட பாரம்பரியம் மீதும் அவர்கள் சிந்தனைகள் செல்வதாகத் தெரியவில்லை.

எமது பிள்ளைகளும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்திருக்க தலைப்படுகின்றனர். கல்வி பற்றிய சிந்தனை, தமது எதிர்கால நிலைப்பாடுகள் பற்றிய சிந்தனைகள் அற்றவர்களாக, ஊர்சுற்ற விளைகின்றனர். இவையனைத்தும், எமது இளைய சமுதாயத்தை அண்மைக்காலமாகப் பாதித்து வருகின்றன.

இளைஞர் யுவதிகளின் கொள்கையியல் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, அதன்பால் இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்தவும் வழிகாட்டவும், முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் முயலுதல், இத்தருணத்தில் இன்றியமையாததாகியுள்ளது’ என அவர் மேலும் கூறினார்.

Related Posts