இரத்மலானை கந்தவல வீதியிலுள்ள தாளயம் பாவாம்மா பள்ளிவாசலை தீக்கிரையாக்க இனவாதிகள் சிலர் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பள்ளிவாசலின் வாயில் கதவருகில் பழைய ஆடைகளில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டுத் தீ மூட்டப்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் தீப்பிழம்பு கிளம்புவதையும் புகை வருவதையும் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கு விரைந்து சென்று தீயை நீர் ஊற்றி அணைத்து பெரும் அனர்த்தத்தை தடுத்துள்ளதாக ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
67 வருடமாக இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து வரும் இப்பள்ளிவாசலில் இதுவரை காலமும் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெற வில்லை.
அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் தொடரான தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் இப்பள்ளி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வருகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை, இந்தப் பள்ளிவாசல் சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டதை யடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் மோப்பநாய்கள் சகிதம் தேடுதலையும் அப்பகுதியில் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.