இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணாமல்போன சிறுவன் பத்தரமுல்லை நீதிமன்றத்தால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசித்து வந்த 16 வயதான ஜேசுநாயகம் நிமலேந்திரன் என்ற சிறுவனே நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட முறுகல் காரணமாக பாடசாலைக்கு வர வேண்டாம் என்று மறுக்கப்பட்டதனால் வீடு செல்ல முடியாத நிலையில் குறித்த சிறுவன் கொழும்புக்குச் சென்றுள்ளான்.
கொழும்பில் ஒரு சிங்கள இளைஞன் சிறுவனை அழைத்துச் சென்று தனது இல்லத்தில் ஒரு நாள் தங்குவதற்கு இடம் கொடுத்து மறுநாள் காலையில் புத்தபிக்கு ஒருவரிடம் கையளித்துள்ளான். பின் குறித்த புத்த மதகுரு சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் சேர்த்து விட்டு, அவனது படிப்பினை சிங்கள மொழிமூலமாக கொழும்பு சென். அண்ரனீஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்துள்ளான்.
இந்த நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று தனது அப்பாவிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவரை வருமாறு கூறியுள்ளான். அதனையடுத்து அங்கு வந்த பெற்றோரிடம் பத்தரமுல்லை நீதிமன்றம் குறித்த சிறுவனை பாரம் கொடுத்துள்ளது.
சிங்கள மொழி பேசியதால் தமிழ் மொழியை தன்னால் வேகமாக பேச முடியவில்லை எனவும், தான் நன்றாக பராமரிக்கப்பட்டதாகவும் நிமலேந்திரன் கூறியுள்ளான்.