இரண்டு இணையத்தளங்களுக்கு எதிராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் சார்பில் யாழ்.பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.நேற்று(09.01.2012) திங்கட்கிழமை இந்த வழக்கு யாழ்.நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, அரச அதிபர்மீது குறித்த இணையத்தளங்கள் எவ்வகையான அவதூறுகளை மேற்கொண்டுள்ளன என்பன தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விடயம் தொடர்பாக யாழ்.அரச அதிபரிடம் கேட்டபோது, நீணடகாலமாக தன்னைப்பற்றிய பல அவதூறான தகவல்களை இந்த இரண்டு இணையத்தளங்களும் வெளியிட்ட வண்ணம் உள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்து செல்வதனாலேயே தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
பொலிஸாரே தன் சார்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனவரி 4ஆம் திகதி யாழ்ப்பாணத்து களநிலமைகளை அறிந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவினருடனான கலந்துரையாடலையும் இந்த இணையத்தளங்கள் தவறாகப் புரிந்துகொண்டு செய்தி வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“வெளிநாட்டு ராஜதந்திரகள் வந்தால் உங்கள் அலுவலகம் கூட்டிக் கொண்டு போய் பேச்சுவார்தை நடத்தக் கூடாது. என் முன்னிலையில் பேசுங்கள் என மிரட்டியதாக வெளிவந்த செய்தி முற்றிலும் பொய்” என்றார்.
அத்துடன், ஆளுநர் எவருடனும் மிகவும் மென்மையாகப் பேசக்கூடியவர். அவ்வாறே என்னுடனும் நடந்துகொள்வார் என்றும் யாழ்.அரச அதிபர் மேலும் கூறினார்.