இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டகாச ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் சொக்கித்தான் போனார்கள். கேப்டன் தோனி தவிர சுரேஷ்ரெய்னா, டுவைன்பிராவோ, அஸ்வின், மெக்குல்லம், ஸ்மித், ஜடேஜா என்று பல ஆல்ரவுண்டர்களுடன் வலுவான அணியாக வலம் வந்தது.
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று ஆதிக்கம் செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.
இதற்கிடையே, கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூதாட்டப் புகார் எழுந்தது. எனவே, அந்த இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. அந்த தடை இன்றுடன் முடிவடைகிறது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரின் முடிவில், அடுத்த சீசனில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என்று சென்னை அணியின் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். டிரம்ஸ் சிவமணியின் கச்சேரி சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் களைகட்ட போவது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், “விசில் போடு… சி.எஸ்.கே. ரிட்டர்ன்ஸ்… ” என டுவிட்ட்ரில் பதிவிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை இன்று நீங்குவதால், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்குவது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்றால் மிகையில்லை.