ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாபின் தலையை வெட்டிக்கொல்லும் காட்சியை காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
அந்த காணொளியில் சட்லாப் நீளமான முழு உடலுக்குமான ஆடை அணிந்த நிலையில் முட்டிக்கால் போட்டு இருப்பது போலவும், அவருக்கு அருகில் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர் கத்தியுடன் இருப்பது போலவும் காட்டப்படுகிறது.
முகமூடியணிந்த நபர் ஒருவர் தாம் பிடித்துவைத்திருக்கும் மற்றும் ஒரு பணயக்கைதி குறித்து எச்சரிக்கை விடுப்பதோடு இஸ்லாமிய அரசுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் நாடுகளின் அரசுகள் தங்களின் கூட்டணியை முடிவுக்கு கொண்டுவரும்படியும் கூறுகிறார்.
ஊடகவியலாளர் சட்லாப் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் கடத்தப்பட்டார். அவரைப்போலவே பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜேம்ஸ் பாலியை கடந்த மாதம் தான் இஸ்லாமிய அரசு அமைப்பு தலையை வெட்டிக் கொன்றிருந்தது. கடந்த மாதம் ஜேம்ஸ் பாலி கொல்லப்படுவதைக் காட்டும் காணொளியில் சட்லாப்பும் காட்டப்பட்டிருந்தார்.
நேற்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த குறிப்பிட்ட காணொளியின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.
இந்த கொலையானது மிகவும் அருவருக்கத்தக்க, வக்கிரமான செயல் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கடுமையாக கண்டித்திருக்கிறார்.