கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா என கேள்வியெழுந்துள்ள நிலையில் அதனை ஆராய்வதற்கு புதிய விசாரணைக்குழுவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார்.
கிளிநொச்சியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் கள நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களம் சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இரணைமடுக் குளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டதாகவும், அதனை முன்னாள் ஆளுநர் நீக்கியமையால், அந்த விசாரணை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இரணைமடுகுளத்தினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை வடக்கு மாகாண ஆளுநர் நியமத்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண அமைச்சு ஒன்றின் செயலாளரைாக இருந்த ஓய்வுப்பெற்ற பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றிய இந்திரசேன, மற்றும் ஆளுநரின் சிபாரிசுக்கு அமைய மொரடடுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினரிடம், இரணைமடு விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது கேட்டறிந்தார்.
இதன்போது, கிளிநாச்சி மாவட்டத்தில் மலேரியாவை பரப்பும் நுளம்புகள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இதுதொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான முன் எச்சரிக்கை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் ஜேயராஜா தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலை அடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசம் மற்றும் இரணைமடுக் குளம் ஆகியவற்றை வட. மாகாண ஆளுநர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.