“யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும்” என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின் பிரதிநிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் அந்த மக்களுக்கு மிகக் குறைந்தளவான செலவில் இரணைமடு பாரிய குடிதண்ணீர்த் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
மேற்படி மக்களுக்கு கடல்நீரைச் சுத்திகரித்து குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றபோதும், அது பாவனையாளர்களுக்கு அதிக செலவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சுமீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கில் இப்போதைக்கு 8 இலட்சத்து 55 ஆயிரம் பேர் குழாய் ஊடாக நேரடியாக குடிதண்ணீரைப் பெறுகின்றனர். வடக்கு, கிழக்கில் மொத்த சனத்தொகையில் 31.8 சதவீத மக்களுக்கு குழாய்முலம் குடிதண்ணீர் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. யாழில் குழாய் மூலம் குடிதண்ணீர் வழங்கும் திட்டம் மிகக் குறைந்தளவிலேயே அமுல்படுத்தப்படுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
குழாய்கள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீரை விஸ்தரிக்க புதிய திட்டம் அமுல்படுத்தி வருகின்றோம். யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக நாம் ஏற்கனவே ஆலோசித்ததற்கமைய இரணைமடு குளத்திலிருந்து குடிதண்ணீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு விவசாயிகளின் எதிர்ப்புகளால் தடைப்பட்டிருக்கின்றது. இதனால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 250 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் திட்டத்தில் கடல்நீரை சுத்திகரித்து குடிதண்ணீர் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவிருக்கின்றது.
இருந்தாலும் நிரந்தரமான செயற்றிட்டமாக இரணைமடு குளத்திலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வதுதான் எமது அமைச்சைப் பொறுத்தவரை மிகச்சிறப்பானதாக இருக்கும். இல்லாவிட்டால் குடிதண்ணீருக்கான செலவீனம், பாவனையாருக்கான செலவீனம் மிகக் கூடியளவில் வந்துவிடலாம் என்ற ஆபத்து இருக்கின்றது.
இதனால் கடல்நீரை சுத்திகரித்து வழங்குவதில் இருக்கின்ற செலவீனங்களை வைத்துப் பார்க்கும்போது வசதியாக இயற்கையாக இரணைமடு குளத்திலிருந்து குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கு வடக்கு மாகாணத்திலிருந்து இந்தச் சபையைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் எங்களுடைய அமைச்சுக்கு ஒத்தாசை வழங்கமுடியுமாக இருந்தால் யாழ். குடாநாட்டுக்கும் தீவகப் பகுதிக்கும் பாவனையாளர்களுக்கு மிகக் குறைந்தளவிலான செலவில் பாரியளவான குடிதண்ணீர்த் திட்டத்தை எம்மால் நிச்சயமாக அமுல்படுத்தக்கூடியதாக இருக்கும்” – என்றார்.