இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர் கலந்துரையாடலின் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
யாழ்.பொது நூலகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற ‘இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவருதல்’, ‘ஜெனீவாத் தீர்மானத்திற்கான கூட்டமைப்பின் நடவடிக்கைகள்’ உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலினைத் தொடர்ந்து, சம்பந்தனினால் தெரிவிக்கப்பட்ட கருத்தினை சம்பந்தனுக்கு உடல்நலம் சரியில்லாததினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாசித்தார்.
அதில், ‘இரணைமடுக் குடிநீர்நீர்ப்பாசன விடயம் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனால் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது.
தற்போது உள்ள முறையில் இரணைமடுத்திட்டம் அமுல் செய்யப்பட்டால் இதுவரை காலமும் இரணைமடு குள நீரினால் பயன்களை அனுபவித்த கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பாதகமான விளைவுகளை சந்திப்பார்கள் என்பதனை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனாலும் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். கைவிடக்கூடாது எங்களது ஏகோபித்த முடிவு.
இரணைமடுத் திட்டத்தின் ஒப்பந்தத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியவற்றை ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் விவசாயிகளுடனும் காலதாமதம் இன்றி கலந்தாலோசித்து விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு திட்டம் மாற்றியமைக்கப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும்.
அத்துடன், கிளிநொச்சி யாழில் உள்ள மற்றய நீர் நிலைகளின் செயற்பாடுகள் தொடர்பாக சமகாலத்தில் முடிவு எடுக்கப்படவேண்டும் என்பது ஏகமனதாக உறுப்பினர்களினால் இந்தக் கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு நம்பிக்கைத் தன்மையற்றது.
காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு நம்பகத்தன்மையற்றது என இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.
மேற்படி ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்டத்தில் விசாரணைக்கு வந்தபோது, அருகில் இன்னொரு இடத்தில் காணாமற்போனோர் தொடர்பில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு காணாமற்போனோரின் உறவினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு காணாமற்போனோர் மரணமடைந்ததாக மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இந்த விடயம் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வேண்டுமென்றே சாட்சியமளிக்க முடியாமல் செய்யப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
ஆணைக்குழுக்கென்று நியமிக்கப்பட்ட அரச சட்டமா அதிபர் திணைக்கள சட்டவுரைஞர் சமிந்த என்பவர், ஆட்கொணர்வு மனு தொடர்பில் அரச சட்டத்தரணியாக ஆஜராகி சரணடைந்தவர் என்று யாருமில்லையெனவும், காணாமற்போனோர் என்று யாரும் இலங்கையில் இல்லையெனவும் வாதிட்டவர்.
ஆகவே, மேற்படி இரண்டு விடயங்கள் காரணமாகவும் ஆணைக்குழுவில் நம்பகத்தன்மை இல்லையென்பதினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.