இரணைதீவுக்குச் செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு- மக்கள் மத்தியில் அமைதியின்மை!

இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அரசாங்கத்தின் தீர்மனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தையடுத்து, இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகுமூலம் இரணைதீவுக்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினரால் பூநகரிப் பிரதேச செயலாளர், யாழ். மறைமாவட்ட ஆயர், யாழ். மனித உரிமை ஆணைகுழுனருக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts