ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.
கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில் மிகச் சிறிய சிறுபான்மைத் தரப்பினராகவே இருக்கின்றனர்.என்ன செய்யவேண்டும் என்பதை பெரும்பான்மையினர் தீர்மானிக்க முனைவார்களாக இருப்பின் கடும்போக்காளரரான சிறுபான்மையினர் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். அவரது முழுமையான நேர்காணல் பின்வருமாறு:
உங்களிடம் முற்று முழுதான அதிகாரம் இருந்த காலப்பகுதிக்கும் தற்போதைய காலப்பகுதிக்கும் எத்தகைய வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?
ஐக்கிய தேசிக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பணியாற்றுவதே தற்போதைய நிலையில் பெரும் வித்தியாசமாகக் காணப்படுகின்றது. சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து பணியாற்றுவது இலங்கையின் வரலாற்றிலேயே முதற்தடவையாகும். நான் இதனைச் செய்ய முற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக எதிர்ப்பைக் காட்டியது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெற்றிகொள்வதற்கு எனககு ஏழு வாக்குகளே இறுதியில் தேவையாக இருந்தது.
நீங்கள் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய அமைப்பிற்கு தலைமை தாங்குகின்றீர்கள். எதற்காக இதனைத் தேர்ந்தெடுத்தீர்கள் ?உங்கள் அமைப்பின் மூலம் அடைவதற்கு எதிர்பார்க்கும் இலக்கு என்ன?
நின்று நிலைக்கக்கூடிய சமாதானத்தை உருவாக்குவதற்கு உதவும் வகையில் இலங்கையிலுள்ள வித்தியாசான மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எப்போதுமே என்னுடைய பேரார்வமாக இருந்தது.
இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்காக அதிகமான நேரப்பகுதியை செலவழித்திருந்தது மட்டுமன்றி ஏறத்தாழ நான் கொல்லப்படும் நிலையை எதிர்கொண்டிருந்தேன்.நான் அரசியல் யாப்பை முன்னகர்த் நடவடிக்கை மேற்கொண்டிருந்த வேளையிலேயே விடுதலைப்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர்.
தற்போது நீங்கள் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் மூலம் ஏதேனும் பணிகளை ஆரம்பித்துச் செயற்படுத்துகின்றீர்களா?
நாம் பத்து பெரும் திட்டங்கள் அ டங்கிய வரைவைத் தயாரித்துள்ளோம் முதலாவது திட்டத்தை தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தோம்.பிரதமர் பங்கேற்றது தேசிய வைபம் அதுவல்ல. மாறாக சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலே முதலாவது திட்டத்தை ஆரம்பித்திருந்தோம். தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக சிங்களம் முஸ்லிம் மற்றும் தமிழ் சிறார்களை அங்கே ஒன்றாக அழைத்துவந்திருந்தோம்.
அதன் பிறகு களுத்தறையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம். இந்த மாத முடிவுவரையில் இதுபோன்று 37 நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.ஒவ்வொரு நாளும் நான் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுவருகின்றேன்.
ஏனையவர்களில் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொண்டு செயற்படுவதற்கும் பாராட்டுவதற்கும் வழிசமைக்கும் வகையில் வித்தியாசமான இனங்கள் மதங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றாக அழைத்து இந்த செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.ஏனையவர்களின் வைபவங்களைப் பார்த்து சிரித்துக் கேலிசெய்வதை விடுத்து அதைப் பார்த்து பாராட்டுவதற்கும் தமக்குரியதாக ஏற்றுக்கொள்வதற்கும் இதன் மூலம் சிறார்கள் பழக்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சுதுநெலும் போன்ற திட்டங்களை நீங்கள் முன்னெடுத்தாலும் கடும் போக்காளர்கள் குறைந்த பட்ச நேரத்திலேயே அனைத்தையும் சீரழித்துவிடக்கூடியதரப்பினராய் இருப்பதை கடந்த கால வரலாறு எடுத்துணர்த்துகின்றது. இதுபோன்ற தரப்பினரை எதிர்கொள்வதற்கான திட்டங்களேதும் உங்களிடம் இருக்கின்றதா?
கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில் மிகச் சிறிய சிறுபான்மைத் தரப்பினராகவே இருக்கின்றனர்.என்ன செய்யவேண்டும் என்பதை பெரும்பான்மையினர் தீர்மானிக்க முனைவார்களாக இருப்பின் கடும்போக்காளரரான சிறுபான்மையினர் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.அவர்கள் முக்கியமற்றவர்கள்.
தமிழ்த்தரப்பில் விடுதலைப்புலிகளே கடும்போக்காளர்களாக திகழ்ந்தனர். ஆனால் கடும்போக்கற்றவர்களைப் படுகொலைசெய்ததன் மூலமாக அவர்கள் பெரும்பான்மையானவர்களாக மாற்றம் கண்டனர்.ஜனநாயக அரசியல் வாதிகளை அவர்கள் படுகொலைசெய்தனர். வன்முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து பொதுமக்களை அவர்கள் படுகொலைசெய்தனர். அந்தவகையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
ஜனநாயக அரசியல் வாதிகளை அவர்கள் படுகொலைசெய்தனர். வன்முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து பொதுமக்களை அவர்கள் படுகொலைசெய்தனர். அந்தவகையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதிர்ஷடவசமாக சிங்களத்தரப்பில் அவ்வாறான நிலை காணப்படவில்லை. தற்போது தமிழர் முஸ்லிம் தரப்பிலும் கடும்போக்காளர்கள் மிக மிகக் குறைவானவர்களாவே உள்ளனர்.
என்னுடைய காலப்பகுதியல் அரசயலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளமுடியாமைக்கு கடும்போக்காளர்கள் காரணமாக இருக்கவில்லை. அப்போது ஜாதிக ஹெல உறுமய கிடையாது. பொதுபலசேனா கிடையாது.ஜேவிபிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் மாத்திரமே இருந்தார்.இதனால் அவர்கள் எதிர்ப்பைக் காண்பிக்கும் அளவிற்கு பலம்பெற்றிருக்கவில்லை.
நான் பதவிக்கு வந்த ஆரம்பகாலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் பிரான்ஸ் நிறுவனமொன்றை அழைத்துவந்து கருத்துக்கணிப்பொன்றை நடத்தியிருந்தேன். அதில் 23வீதமான மக்களே அதிகாரப்பகிர்விற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஆனால் எமது சுதுநெலும் திட்டத்தை முன்னெடுத்து மீண்டும் இருவருடகாலத்தில் அதே நிறுவனத்தைக் கொண்டுவந்து கருத்துக்கணிப்பு நடத்தியபோது அதிகாரப்பகிர்விற்க 68 வீதமான சிங்கள மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றியவள் என்றவகையில் சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர் என்பதை நான் நன்கறிவேன்.
வாக்குகளைப் பெறுவதற்காக சிங்கள மக்களிடம் உண்மையைக் கூறுவதற்கு சிங்களத் தலைவர்கள் தவறியமையே அவர்கள் ஆதரவை வெளிப்படுத்தாமைக்கான காரணமாக இருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் வழங்கப்படவேண்டும் ன சிங்களமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த ஒரே தலைவர் நான் தான். 15 மாத காலப்பகுதியல் நான் மாகாணசபைத் தேர்தல் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களையும் எதிர்நோக்கி ஒவ்வொரு தடவையிலும் வரலாறுகாணாத வகையில் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றிருந்தேன்.மக்களுக்கு உண்மையை எடுத்து விளக்கினால் அவர்கள் புரிந்துகொள்வர்.
நாம் சிறுபான்மையினரான கடும்போக்காளர்கள் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அப்போது ஐக்கிய தேசியக்கட்சி எம்மோடு ஒத்துழைக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி எம்மோடு பணியாற்றிக்கொண்டிருந்தது. கூட்டணியின் தலைவர்களிலொருவரான நீலன் திருச்செல்வம் அரசயல்யாப்பை தயாரித்த குழுவில் ஒரு அங்கத்தவராக இடம்பெற்றிருந்தார்.அதனால் தான் பிரபாகரன் அவரைக் கொன்றொழித்திருந்தார்.
இறுதியில் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு ஏழு வாக்குகளே அவசியமாக இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்க மறுத்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் எட்டு வாக்குகள் இருந்தன. ஆனால் அவர்களும் ஆதரவளிக்கவில்லை.
என்னுடைய அரசயல்யாப்பு வரைபானது இந்த நாட்டில் நீங்கள் (தமிழ் மக்கள் ) பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் தீர்விலும் பார்க்க மிகவும் அதிகமான ( அதிகாரப்பகிர்வினை) கொண்டமைந்திருந்தது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அத்தகையதொரு தீர்வை முன்வைப்பதற்கான துணிவு என்னிடமிருந்தது. தற்போது பிரபாகரன் இல்லாத நிலையிலும் யுத்தம் நிறைவுபெற்றுவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் அதுபோன்று அதிகமானதை பெற்றுக்கொள்ளப்போவதில்லை ஆனால் அவர்கள் தம் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்தானவர்கள்.
விடுதலைப்புலிகள் பலம்மிக்கவர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் முன்வைத்திருந்த அரசியல்தீர்வு ஒற்றையாட்சியைத் தாண்டியதாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வகையில் அதிகளவான அதிகாரப்பகிர்வைக்கொண்டதாக அமைந்திருந்தது. தற்போது பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் பலரும் விடுக்கின்ற அறிக்கைகள் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வுகாணப்படும் என்பதாக கோடிட்டுக்காட்டுகின்றன. அண்மையில் இடம்பெற்ற நினைவுரை நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இந்தியத் தூதுவர் கோபாலக் கிருஷ்ண காந்தி இந்தநாட்டின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குதீர்வு காணப்படவேண்டுமானால் தற்போதைய சாபக்கேடான ஒற்றையாட்சி அரசியல்யாப்பிலிருந்து மேம்பட்டதாக சமஷ்டி அம்சங்களைத்தாங்கியதாக புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படவேண்டும் என்று கருத்துவெளியிட்டிருந்தார். இதுபற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?
வார்த்தைகள் முக்கியமற்றவை வார்த்தைகள் முக்கியமற்றவை. நான் அப்போது முன்மொழிந்தது சமஷ்டி ஆட்சி முறைக்கு மிகவும் அண்மித்த ஒரு தீர்வாக அமைந்திருந்தது. நாம் அதனை (Union of regions )பிராந்தியக்களின் ஒன்றியம் என அழைத்திருந்தோம்.ஒற்றையாட்சியோ சமஷ்டியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல. தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். ராஜபக்ஸவும் அவரது மடையர்களும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கின்றனர். வார்த்தைகள் முக்கியமற்றவை.
நீங்கள் முன்னர் உங்களது காலத்தில் முன்மொழிந்த அதிமேம்பட்ட தீர்வை இப்போது வழங்கப்போவதில்லை என்கிறீர்கள். அப்படியானால் அதிகபட்சத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடவேண்டுமா?
அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக தனியான அலகுகள் இருக்குமிடத்தில் அந்தளவு தூரத்திற்கு ( பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் முன்மொழியப் பட்ட தீர்வு யோசனை போன்று) பயணிக்க வேண்டியதில்லை எனக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஏனையவர்களும் கூறியிருக்கின்றனர்.
தமிழர்கள் தொடர்ச்சியான முறையில் தமது தீர்விற்கான அபிலாஷையாக இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வை வலியுறுத்திவந்துள்ளனர். புதிய அரசயலமைப்பு மூலமாக வழங்க உத்தேசிக்கப்படும் தீர்வில் தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஏற்பாடுகள் இடம்பெறுமா? இதிலிருந்து எதனை எதிர்பார்க்கமுடியும்?
தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் நாம் வழங்குவது அமைந்திருக்கும். வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக எமது தீர்வு அமைந்திருக்கும் .
உங்களது தந்தை பண்டாரநாயக்கவும் தமிழர் தலைவர் செல்வநாயகமும் இணைந்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் தொடர்ந்து டட்லி-செல்வா ஒப்பந்தம் என பல ஒப்பந்தங்கள் கடந்து வந்த காலப்பகுதியில் கைச்சாத்திடப்பட்டிருந்தன. ஆனால் அவை ஏதும் முறையே நடைமுறைப்படுத்தப்படாமல் வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் தூக்கிவீசப்பட்டது. முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் உத்தேசத் தீர்வானது நின்று நிலைக்கக்கூடியதாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உங்களது அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்தப்போகின்றது?
அந்தக்காலப்பகுதியல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செய்யநினைக்கின்றவிடயங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்பைக் காண்பித்தது.ஐக்கிய தேசியக்கட்சி செய்ய முனைபவற்றிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பைக் காண்பித்தது. தற்போது அரசாங்கத்தின் பாகங்களாக இரு கட்சிகளும் ஒன்றாகவுள்ளன. தற்போது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்துசெயற்படுகின்றன. ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது.அந்தவகையில் இதனை ( தீர்விற்கான அரசியல்யாப்பை )நிறைவேற்றிக்கொள்வதற்கு முன்னெரெப்போதும் காணப்படாத சந்தர்ப்பம் தற்போது காணப்படுகின்றதென நான் நம்புகின்றேன். இதற்கு தமிழ் மக்கள் எமக்கு உதவ வேண்டும்.
உங்களுடைய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகளைப் பூர்த்திசெய்வதற்கான கால வரையறையேதும் உள்ளதா?
நல்லிணக்கமென்பது பல ஆண்டாண்டு காலமாக முன்னெடுக்கப்படவேண்டியது எம்மிடம் மூன்றாண்டுத்திட்டங்கள் உள்ளன. ஐந்தாண்டுத்திட்டங்கள் உள்ளன. அவை முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியவை. மக்களின் மனங்களையும் இதயங்களையும் மாற்றியமைப்பதே எமது பணியாகும். அதற்கு பலவருடகாலமெடுக்கும். தற்போது திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இன்னமும் சில வருடங்களில் நிலைமைகள் மாற்றமடைந்திருக்கும் என எண்ணுகின்றோம். அரசியல்யாப்பு மாற்றம் என்பது முற்றியும் தனித்துவமான விடயமாகும். நானும் அதிலே பங்கெடுத்திருக்கின்றேன். அதுவொரு அரசியல் நடைமுறை அதனை அரசாங்கம் விரைந்துசெயற்படுத்தவேண்டும். நாம் தற்போது அனைத்து தரப்பினருடனும் கலந்தாராய்ந்து வருகின்றோம்.எது தற்போது சாத்தியமானது என்பதை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.
இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் குறிப்பாக முன்னாள் போராளிகள் விதவைகள் தொடர்பில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வெறுமனே கண்துடைப்பிற்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னமும் பல விடயங்கள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் தெரிவக்கப்படுவது பற்றி என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
இந்த அரசாங்கம் உண்மையில் கடந்த ஓகஸ்ற் 17 ந்திகதிகக்கு பின்னரே திட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றலைப்பெற்றதென்பதை நீங்கள் முதலில் நினைவில் கொள்ளவேண்டும். அதற்கு முதல் மஹிந்தவின் தரப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இணைந்துகொண்டு நாங்கள் முன்வைக்கும் திட்டங்களை முன்னெடுக்கமுடியாத வகையில் தடுத்துக்கொண்டிருந்தனர்.
தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் செப்டம்பர் முதலாம் திகதி முதலே அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பது சாத்தியமானது. அதிலிருந்து பார்க்கும் போது எத்தனை மாதங்கள் நான்கரை மாதங்களே. அந்தவகையில் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அனைத்தையும் பூர்த்திசெய்துவிடமுடியாது.
நாங்கள் திட்டங்களை வடிவமைத்துள்ளோம். அதற்கான நிதியையும் அடையாளங்கண்டுகொண்டுள்ளோம். தற்போது திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும் எமது அலுவலகத்தினால் பல அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஒருங்கிணைத்து முன்செல்லப்படவுள்ளன. இதற்காக பல பில்லியனரூபாய்கள் எமக்குகிடைக்கவுள்ளன.
ஆட்சிமாற்றத்தின் தூண்களில் ஒருவராக நீங்கள் இருக்கின்றீர்கள். இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்தியடைகின்றீர்களா?
பொதுவாக ஆம் (திருப்திகொண்டுள்ளேன்). நாம் மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதாக வாக்களித்திருந்தோம். நல்லாட்சி என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுதல் அதில் ஒரு அம்சமாகும். அது நடந்தேறியுள்ளது. மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் சாத்தியமாகியுள்ளது.மேலும் சுதந்திரத்தை வழங்கவும் ஜனநாயக முன்னேற்றங்களை காண்பதற்காகவும் சுயாதீனக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.இதுவும் நல்லாட்சியை வலுப்படுத்தும்.
நல்லாட்சியின் மற்றுமொரு அம்சமாக ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கை அமைந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைவழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகியன இதில் அடங்குகின்றன. இந்த அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது. அதனைப் பூர்த்திசெய்யும் தறுவாயில் உள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய ஊழல் மோசடிகளைத்தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுவிட்டன. பிரதமர் இதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். விரைவில் இது நடைமுறைக்கிடப்படும் .
தென் பகுதியிலுள்ள அரசியல் தலைவர்கள் மறுதலித்துக்கொண்டிருந்தபோது சனல் 4 காணொளிகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்திய விரல்விட்டெண்ணக்கூடிய தென் பகுதியைச் சேர்ந்த தலைவராக நீங்கள் விளங்குகின்றீர்கள். நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப்பேருரையை ஆற்றும்போது நீங்கள் சனல் 4 தொடர்பாக கவலைவெளியிட்டதுடன் இலங்கையரென்ற வகையில் வெட்கித்தலைகுனிகின்றேன் எனக்கூறியிருந்தீர்கள். இறுதிப் போர் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கும் பொறுப்புக்கூறலுக்கும் இந்த அரசாங்கம் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது?
இந்த விடயத்திற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்துச்செயற்படுகின்றது.
ஜனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சர் என முக்கியமான தலைவர்கள் உள்ள உயர் மட்டக்குழுவொன்று உள்ளது. இதில் நானும் இடம்பெற்றிருக்கின்றேன்.இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தைக் கையாளும் வகையில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இக்குழு நான்கு முனைத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.இந்தவகையான கட்டமைப்புக்களை இன்று ஏற்படுத்தி விட்டு நாளையே அதனை நடைமுறைப்படுத்திவிடமுடியாது. இவை மிகவும் சிக்கல் வாய்ந்த விடயங்களாகும். இந்த விடயத்தில் கட்டமைப்புக்கள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுவிட்டன. இதுபற்றி நாம் அதிகமாகப் பேசுவதில்லை. இல்லாவிடில் கடும்போக்காளர்கள் காட்டுக்கூச்சலித்தொடங்கிவிடுவார்கள்.
1995ம்ஆண்டு உங்களுடைய ஆட்சிக் காலத்தின் போது நவாலித் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு எப்படியாக பொறுப்புக்கூறப்போகின்றீர்கள்?
யுத்தத்தின் போது நவாலி மட்டுமன்றி மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றன. யுத்தத்தின் போது நிறைய விடயங்கள் இடம்பெறவதுண்டு.பதவியிலுள்ள அரசாங்கம் அதற்கான பொறுப்புக்களை ஏற்கவேண்டும். இந்தச் சம்பவம் (நவாலி தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல்) தொடர்பாக அறியத்தந்தவேளையில் நான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டமொன்றில் பங்குபற்றிக்கொண்டிருந்தேன்.உண்மையில் நான் இராணுத்தரப்பினரையும் விமானப்படையினரையும் நோக்கி உரத்துக்கத்தினேன்.அது ஒரு தவறு.சிறிய முகாம் போன்று விடுதலைப்புலிகள் ஒன்றுகூடுமிடத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதாக அவர்கள் எண்ணியிருந்தனர்.அதற்கருகில் அப்படியொன்று இருந்தது. ஆனால் அவர்கள் தமது இலக்கைத் தவறவிட்டு தேவாலயத்தின் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. என்ன இடம்பெற்றிருந்தாலும் விமானப்படை இராணுவம் அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.
இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த போது தமிழ் மக்கள் பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவருதல்; காணிகளை விடுவித்தல் போன்றவை முக்கிய இடம்பிடித்திருந்தன. அரசாங்கமானது அடையாளத்திற்காக சிலரை விடுவித்துள்ளது. சில தொகுதிக் காணிகளை விடுவித்துள்ளது.ஆனால் காணிகளில் பெரும்பலானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதுபற்றிய உங்கள் பதில் என்ன?
இது விடயத்தில் திங்களன்று ( 18) இராணுவத்தினருடன் நான் தொடர்புகொண்டு வினவியிருந்தேன். இராணுவத்தினர் வசம் யாழ்குடாநாட்டில் 11700 ஏக்கர் காணித்துண்டுகள் இருந்தன.இதில் 7000 ஏக்கர்களை இதுவரையில் அவர்கள் மீளவும் உரியவர்களிடம் திரும்பக் கையளித்துள்ளனர்.ஜனாதிபதியால் அண்மையில் 700 ஏக்கர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமையே விடுவிக்கப்பட்ட கடைசித்தொகுதிக்காணிகளாகும். தற்போதைய நிலையில் இராணுவத்தினர் வசம் 4600 முதல் 4700 ஏக்கர் காணிகளே உள்ளன. இது பாதுகாப்புக் காரணங்களுக்கு அவசியமானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதிலும் 700 ஏக்கர் வரையான காணிகளை விடுவிக்கமுடியும் என தகவல் தரப்பட்டுள்ளது. அப்படிப்பார்கையில் 11700 ஏக்கர்களில் இருந்து 4000 ஏக்கர்களாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் பரப்பளவு குறைந்துள்ளது.
கருணா பிள்ளையான் போன்றவர்கள் வெளியில் இருக்கையில் இன்னமும் விடுவிக்கப்படாமலுள்ள அரசியல் கைதிகள் பற்றி?
கருணா ,பிள்ளையானை விடுவித்தது எமது தவறல்ல மஹிந்தவே அதனைச் செய்திருந்தார்.குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சிறையிலடைத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சிலர் விடுவிக்கப்படவுள்ளனர். இதனைத் தவிர நூற்றுக்கும் குறைவான இன்னுமொரு தொகுதிக்கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளனர்.
சாட்சியங்களுடன் நிருபிக்கப்படக்கூடியதாக இந்தக்குற்றச்சாட்டுக்கள் உள்ளன.அந்தக் கைதிகளை விடுவிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எந்த வழக்குகளும் இல்லாமல் இருப்பவர்களை விடுவிக்கமுடியும். போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என தமிழ் மக்களான நீங்கள் கேட்கின்றீர்கள் . அப்படியானால் ஏன் பிரபாகரனின் படையினர் ஏன் போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்படக்கூடாது எனக் கேட்கின்றேன்.மக்களைக் கொன்றமைக்காகவே அவர்கள் சிறைகளில் உள்ளனர். இராணுவத்தினரை மாத்திரம் ஏன் தண்டிக்க வேண்டும். ஏன் பிரபாகரனின் படையினர் தண்டிக்கப்படக்கூடாது.