முல்லைத்தீவு – மார்க்கம் மற்றும் பிளம்ரன் – வவுனியா ஆகிய இரட்டை நகர ஒப்பந்தங்களின் மூலம் வடக்கு மாகாண மக்கள் அதிகளவான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த இரட்டை நகர ஒப்பந்தங்கள் காத்திரமானவையல்ல என பலர் விமர்சித்து வருகின்றமைக்கு இது காரணமல்லவெனவும், குறித்த ஒப்பந்தங்கள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மாத முற்பகுதியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டு குறித்த இரட்டை நகர ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தார்.
இந்த உடன்படிக்கைகள் தொடர்பாகவும், அதனால் வடக்கு மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பூர்வாங்க ஆய்வுகளை நடத்தி நட்புறவு உடன்பாட்டை செய்திருக்கின்றோம். அதன் பின்னர் அடுத்த கட்டம் மேற்கொள்ளப்படும்.
இந்த உடன்படிக்கைகள் ஊடாக வடமாகாண மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
பாரிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செயற்றிட்டங்களை மேற்கொள்ளப்படலாம்.
அதற்கான பூர்வாங்க ஆய்வுகளை செய்து வருகின்றோம். இந்த உடன்படிக்கைகள் காத்திரமானது அல்ல என விமர்சிக்கப்படுவதற்கு காரணம் இவை தொடக்க நிலையில் இருப்பதேயாகும் எனத் தெரிவித்தார்.