இரட்டைக் குடியுரிமை: 1000 பேருக்கு ‘திருட்டுத் தனமாக’ வழங்கப்பட்டது

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்திருந்த 29 பேரை அந்தப் பதவிகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

ajith_perera

இதேவேளை, இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை இலங்கை அரசாங்கம் இன்னும் முறையாக மீளத் தொடங்காதுள்ள சூழ்நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சட்டவிரோதமாக இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புதிய துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா பிபிசியிடம் கூறியுள்ளார்.

‘முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்கள், நண்பர்கள், தோல்வியடைந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அனைத்து தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களுமாக 29 பேரை நாங்கள் அந்தப் பதவிகளிலிருந்து திருப்பியழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார் அஜித் பெரேரா.

தூதுவர்களை திருப்பயழைத்து அந்தப் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இருப்போரையும் திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் 2011-க்குப் பின்னர் இரட்டைக் குடியுரிமை வழங்கலுக்கு நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்று புதிய துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பெரேரா கூறினார்.

‘ஆனால், ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திருட்டு வழியில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கின்றார்கள். இதுதொடர்பில் நாடாளுமன்றத்தின் பொது கணக்குகள் குழுவில் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம்’ என்றார் அஜித் பி. பெரேரா.

புதிய அரசாங்கம் கொள்கை ரீதியில் இரட்டைக் குடியுரிமை வழங்கலை ஏற்றுக் கொள்வதாகவும், இரட்டைக் குடியுரிமை விநியோக நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts