இரகசிய முகாம்களில் உள்ள எமது உறவுகளை உடன் விடுவியுங்கள்! காணாமல்போக செய்யப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்மல்கக் கோரிக்கை!!

காணாமல்போக செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் 25ஆவது வருட நிறைவு தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

காணாமல்போக செய்யப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து காணாமல்போக செய்யப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள், நாட்டில் இரகசிய முகாம்கள் உள்ளன என திடமாகத் தெரிவித்ததுடன், தமது உறவுகள் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டாலும் பரவாயில்லை தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டனர் இலங்கை அரசு நீதிமன்ற விசாரணைகளுக்காக தயக்கங்களைக் காட்டாது தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும், தாம் நீதிமன்ற நடவடிக்கைகளை நாடப்போவதில்லை எனவும் அவர்கள் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர்.

இதேவேளை, காணாமல்போக செய்யப்பட்டவர்களின் அமைப்பின் சார்பில் இலங்கை அரசுக்குப் பல பரிந்துரைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அதனடிப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் விபரங்களை அரசு வெளியிடவேண்டும், இரகசிய முகாம்கள், இராணுவ முகாகள் தொடர்பான விவரங்களையும், அவற்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின் பெயர்களையும் வெளியிடப்படுதல் வேண்டும். இரகசிய முகாம்கள் மற்றும் இராணுவ முகாம்களிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கும் உறவுகளுடன் தொடர்பினை பேணுவதற்கும் வழியமைக்கப்படவேண்டும், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவேண்டும் என்பதுடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியவர்கள் உடன் விடுவிக்கப்படவேண்டும், இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கான விசாரணை என்பது சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கு அமைவாகவே இடம்பெறவேண்டும் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சர்வதேச நாடுகளின் துாதுவராலயங்களின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல்போக செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts