பிரபல்யமான இருவரின் கையொப்பங்களை சட்ட விரோதமாகவும் தவறான கையொப்பமாகவும் பயன்படுத்துவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இவ்வாறான குற்றத்தினை செய்தமைக்காக திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எனது குரலும் எனது கையொப்பமுமே இன்று ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவ பயன்படுகின்றது. எனது ஆதரவு மஹிந்த ராஜபக் ஷவிற்கு தேவைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் அரசாங்கத்தின் பக்கம் சென்றபோது பொது எதிரணி ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வகையான உடன்படிக்கையினை மேற்கொண்டுள்ளது என்பது எனக்கு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். ஆனால் இன்று நானும் எதிர்க்கட்சி தலைவரும் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.
அரசாங்கத்தின் பிரதானிகள் எதை சொல்கின்றனரோ அதையே செய்யும் வாடிக்கைக்கு திஸ்ஸ பழகிக்கொண்டு விட்டார். அரசாங்கம் தனது வெற்றியினை தக்க வைத்துக்கொள்ள பழ வழிமுறைகளை மேற்கொள்கின்றது. அரசாங்கம் செய்யும் புத்திசாலித்தனமான விடயத்திலும் ஒரு முட்டாள்தனமான தவறினை விட்டு விடுகின்றது. நானும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கும் இரகசிய உடன்படிக்கையில் ஒரு தவறு உள்ளது.
அதாவது நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது நவம்பர் மாதம் 21ஆம் திகதி. ஆனால் நாம் செய்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடும் உடன்படிக்கையில் நவம்பர் 1ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் நவம்பர் மாதம் 1ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்தபோது பொது எதிரணியுடன் கைகோர்க்கும் எவ்வித திட்டமும் இருக்கவில்லை. நான் இறுதி தினங்களிலேயே வெளியேற தீர்மானம் எடுத்திருந்தேன். இவர்களின் பொய்யான அறிக்கைகளை நிரூபிக்க உண்மையானதொரு ஆதாரம் இல்லாது போய்விட்டது.
நான் எனது மனச்சாட்சிக்கு எதிரான எந்த வேலையினையும் இதுவரை காலமும் செய்யவில்லை. இப்போது எதிரணியில் இருக்கும்போதும் எனது மனச்சாட்சிக்கு எதிரான செயற்பாடுகள் எதையும் செய்யப்போவதில்லை.
அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசியமானதொரு மோசமான உடன்படிக்கையினை செய்து கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. அரசாங்கம் எம் வெற்றியினை தெரிந்து கொண்டால் நாம் நிச்சயம் வெற்றி பெறப் போகின்றோம் என்பது ஜனாதிபதிக்கு தெரிந்து விட்டது. எனவே எமது வெற்றியினை தடுக்க இவர்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். எனினும் இவர்கள் தயாரிக்கும் ஆவணங்களை சரியாக தயாரித்து நிரூபிக்க முடியாமை கவலைக்கிடமானது.
மேலும் நான் அரசாங்கத்தில் இருக்கும் போது நான் அறிக்கைகளுக்கு இட்டிருந்த கையொப்பங்கள் இவையென்பது தெளிவாக தெரிகின்றது. இப்போதே அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரங்களை சட்டவிரோதமாக மேற்கொண்டு வருகின்றது. ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எனது கையொப்பமும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமும் மிக முக்கியமானவை. அதை தவறான வகையிலும் பிழையானதாகவும் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே இதற்கு எதிராக நான் தேர்தல்கள் ஆணையாளரிடமும் பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாட்டினை செய்யவுள்ளேன். உடனடியாக இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து சட்டவிரோத தேர்தல்கள் பிரசாரங்களை நிறுத்த வேண்டும்.
மேலும் ஜனாதிபதி என்னை இழிவாக பேசினாலும் அரசாங்கத்தில் இருக்கும் போது எதையும் செய்யாதவன் என விமர்சிக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி இன்று வெற்றி பெறுவதற்கு எனது குரலும் எனது கையொப்பமும் அவருக்கு தேவைப்படுகின்றது. எனவே ஆதரவினைக்காட்டியே ஜனாதிபதியின் வெற்றியினை தக்கவைக்க முயற்சிக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.