நடக்க முடியாத எனது 13 வயது மகனை எங்கு சென்றாலும் தூக்கியபடி, பொருளாதார உதவிகளும் இன்றி கஷ்டப்படுகின்றேன். சிறையிலுள்ள எனது கணவரை விடுதலை செய்தால் நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என மன்னாரைச் சேர்ந்த சந்திரயோதி இராஜலட்சுமி தெரிவித்தார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ்.முனியப்பர் ஆலய முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (16) நடைபெறும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட மேற்படி பெண், தனது சோகத்தை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டபோது,
‘எனது கணவரான சிமியோகன் சந்திரயோதி (தற்போது வயது 35) என்பவரை கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி மன்னாரில் வைத்து கைது செய்து கொண்டு சென்றனர்.
எங்கள் மகன் நோய்த்தாக்கத்தின் காரணமாக 4 வயதிலிருந்து நடக்க முடியாது. அத்துடன், அதிகம் பேசவும் முடியாதவனாக உள்ளான்.
வவுனியாவில் அவரை வைத்திருந்த போது, நாங்கள் ஒருமுறை பார்வையிடச் சென்றவேளையில் எனது மகன் தந்தையை விட்டு வரமாட்டேன் என்று அடம்பிடித்தான்.
அவனை அங்கிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து வந்தேன். அதன் பின்னர் அவன் தந்தையை சந்திக்கவில்லை. கிழமையில் 4 நாட்களுக்கு மகனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். எனக்கு வருமானம் இல்லை.
வேறு பிள்ளைகள் வாங்கி வைத்திருப்பதை தனக்கு வேண்டும் என மகன் கேட்பான். அவனுக்கு இல்லையெனக்கூற எனக்கு மனம் வராது. வாங்கிக் கொடுக்கவும் என்னிடம் வசதியில்லை. எனது கணவரை விடுதலை செய்தால் எங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஜனாதிபதி, அரசாங்கத்திலுள்ளவர்கள் எனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.