இயற்கை உரத்தினை பயன்படுத்தி இராணுவத்தினால் செய்யப்பட்ட வயல் அறுவடை விழா

ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று 26.01.2022 சிறப்புற நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடல் கரையினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 591 ஆவது படைப்பரிவின் தலைமையக முகாமின் பின் பகுதியில் 12 ஏக்கர் வயல் நிலத்தில் இராணுவத்தினர் இயற்கை உரத்தினை பயன்படுத்தி நெற் செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த வயற் செய்கையின் அறுவடை நிகழ்வு பாராம்பரிய முறைப்படி நடைபெற்றுள்ளது. இயந்திரங்கள் எதுவும் அறுவடை விழாவில் பயன்படுத்தப்படவில்லை. முன்னதாக நிகழ்வில் கலந்து கொள்ளும் படை அதிகாரிகள் அதிதிகள் அழைத்துவரப்பட்டு அறுவடை நிகழ்வு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

மத வழிபாட்டுகளுடன் படையினர்கள் அரிவாள் கொண்டு கையால் நெல்லினை அறுவடை செய்து அதனை கொண்டுவந்து நிலத்தில் போட்டு மாட்டினை கொண்டு நெல்லினை பிரித்து அதனை கையால் காற்றில் தூத்தி எடுத்து நெல்லினை மண்பானையில் இட்டு படை அதிகாரிகளுக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கினர்.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் சஞ்சஜ வணசிங்க உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts