இயற்கை அனர்தங்களால் ஏற்படும் அநாவசிய உயிரிழப்புகள் மற்றும் உடமைச் சேதங்களை கட்டுபடுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நேற்றய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதேமேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்தத்தினால் 30,000ற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. லட்ச கணக்கானோரின் உடமைகள் சேதமாக்கப்பட்டன. அந்தவகையில் இன்றைய (26-12-2016) நாள் தேசிய பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தி இருக்கிறது. ஆளிப் பேரலையினாலே எமது மாவட்டத்திலும் 3000 பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.
இன்றைய தினத்தில் சுனாமியால் நாடு முழுவதும் இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளோம். அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். இந்த சுனாமியின் பின்னரே எமது நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் பின்னரே தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் ஸ்தாபிக்கப்பட்டது.
இன்று அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் இயங்கிக் கொண்டு வருகிறது. எமது மாவட்டத்தை பொறுத்தவரையில் சுனாமியை விட வெள்ளம், வரட்சி, மின்னல் புயல் போன்ற இயற்கை அனர்தங்களிலாலேயே பொதுமக்கள் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது.
இயற்கை அனர்தங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அனர்த்தங்களால் அநாவசியமான உயிரிழப்புகள் ஏற்படுவதையும் உடைமைச் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். எமது மாவட்டத்தில் உயிர் இழப்புகள், உடைமைகள் அழிவதையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எமது மாவட்டத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சியிற்குக் கூட பெரும்பாலானோர் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. பின்னர் நிவாரணத்திற்காக அரசாங்கம் பெருமளவான நிதியினை செலவு செய்ய வேண்டி உள்ளது.
எமது மாவட்டதில் கடற்தொழிலிற்கு செல்பவர்களின் இழப்பே அதிகமாக உள்ளது. இந்த வருடத்தில் நான்கு மீனவர்கள் இறந்திருக்கிறார்கள். இவ்வாறான உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு அவர்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.